Sunday, September 26, 2010

பார்க் ஷெரட்டன், BMW CAR , ஒரு இளம்பெண்...


புகார் கொடுக்கவில்லை என்றால் கொலையும் நியாயம்தானோ?
“நள்ளிரவில் பார்க் ஷெரட்டன் ஓட்டல் வாசலில் BMW காரில் நான்கு வாலிபர்கள், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சித்த போது, கால் டாக்ஸி டிரைவர்கள் தலையிட்டு அந்தப் பெண்ணை மீட்டனர். வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்; அந்தப் பெண் புகார் கொடுக்க முன்வராததால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. 11 மணிக்கு மேல் மது பரிமாறிய குற்றத்துக்காக ஓட்டல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்”
-இன்று காலை ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான செய்தி இது...
ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் 11 மணிக்கு மேல் மது சப்ளை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்... இங்கு வரும் இளைஞர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுடைய பிள்ளைகள்தான்! கண்மண் தெரியாமல் குடித்து விட்டு, பெண்கள் என்ற பெயரில் நள்ளிரவுகளில் மட்டும் உலவும் சில ஜென்மங்களை அழைத்துக் கொண்டு, விலை உயர்ந்த கார்களில் மின்னல் வேகத்தில் சென்னை சாலைகளில் பறப்பது தான் இவர்களின் பொழுதுபோக்கு!
இந்தப் பொழுதுபோக்குக்கு அவ்வப்போது பலியாவது நடைபாதைவாசிகள் தான்! கடந்த வாரம் கூட தேனாம்பேட்டையில் இரண்டு உயிர்கள் இந்த வகையில் பலி கொடுக்கப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னர், NEPC நிறுவனங்களின் அதிபரின் பதினாறு வயது மகன் பென்ஸ் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று நடைபாதையில் உறங்கிய 11 பேர் மீது ஏற்றியதில், அதே இடத்தில் மூன்று பேர் உயிர் இழந்தனர். இந்த வழக்கில் இன்னும் எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
சரி, சனிக்கிழமை நள்ளிரவு பார்க் ஷெரட்டன் ஓட்டல் வாசலில் நடந்த விஷயத்துக்கு வருவோம்.... பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காததால், எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். ஏதாவது ஏடாகூடம் ஆகி, அந்தப்பெண் கொலையாகி இருந்தால், வழக்குப்பதிவு செய்து இருப்பார்களா, மாட்டார்களா?
நள்ளிரவில் நடுரோட்டில் காருக்குள் வைத்து ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சிக்கும் செய்தி கிடைத்ததும் நடவடிக்கை எடுக்க வேண்டியது போலீசாரின் கடமை அல்லவா? அதிர்ஷ்டவசமாக கால் டாக்ஸி டிரைவர்கள் தலையீட்டால், அந்தப் பெண் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.
இதுபோன்ற தறிகெட்ட இளைஞர்களுடன், மதுவின் மயக்கத்தில், நள்ளிரவில் சுற்றித் திரியும் பெண் எப்படிப்பட்டவளாக இருப்பாள்? அவளுக்கு இது சரியான தண்டனைதான் என்று வாதிடுபவர்களும் உண்டு.
விலைமகளாகவே இருந்தாலும், அவளின் விருப்பத்திற்கு மாறாக அவளை துன்புறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை. நேற்று தப்பிச் சென்ற அந்த கேடு கேட்டவர்கள் மீண்டும் இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவர்களின் கொடும் செயல்களில் நல்ல குடும்பத்துப் பெண்கள் பாதிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
நள்ளிரவில் கூட நகைகளை அணிந்து கொண்டு பெண்கள் தனியாக செல்லும் காலம் வரவேண்டும் என்பதுதான் மகாத்மா காந்தியின் கனவு! குடித்து விட்டு கும்மாளம் போடும் இழிபிறவிகள் பெண்களிடம் எப்படி நடந்து கொண்டாலும், “புகார் வரவில்லை” என்ற காரணத்திற்காக நடவடிக்கை எடுக்காத நிலை அல்ல.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்” என்றான் முண்டாசுக் கவிஞன்... மடைமை செய்யும் மாதரையும் சேர்த்துக் கொளுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது... 

1 comment:

  1. "நள்ளிரவில் கூட நகைகளை அணிந்து கொண்டு பெண்கள் தனியாக செல்லும் காலம் வரவேண்டும் என்பதுதான் மகாத்மா காந்தியின் கனவு" - மகாத்மா காந்தி போன்ற சில நல்லவர்கள் இருந்த அந்த காலத்திலேயே சாத்தியமில்லாத ஒன்று, நல்லவர்கள் குறைந்துவரும் இந்த (கலி) காலத்தில் சாத்தியமா?
    ஆணுக்கு பெண் சரிநிகர் சமம்ன்னு வாதாடி, எது சுதந்திரம்ன்னு தெரியாமலேயே , அரை குறை ஆடையோடு, ஆண்களோடு கூத்தாடும் (அ) அத்துமீறும் பெண்களுக்கு இந்த செய்தி இனிமேலாவது ஒரு எச்சரிக்கை உணர்வை தரட்டும்.

    மடைமை செய்யும் மாதரையும் சேர்த்துக் கொளுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது...

    ReplyDelete