Tuesday, December 21, 2010

அரசியல்வாதியாகி விட்டார், மன்மோகன்!

எல்லோராலும் இதுவரை மதிக்கப்பட்டு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கும், ஒருவழியாக அரசியல்வாதியாக மாறி விட்டார். என்ன, குழப்பமாக இருக்கிறதா? ஆமாம், பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன், நிதி மந்திரியாக இருந்த காலம் முதல் இரண்டாம் முறையாக பிரதமராக பதவி வகிக்கும் இந்த காலம் வரையிலும் அவரை ஒரு அரசியல்வாதியாக மக்கள் கருதியது கிடையாது. அவரும் தேர்தலில் போட்டியிடாமல், ராஜ்யசபை மூலமாகவே பாராளுமன்றத்துக்குள் நுழைவது வழக்கம்!
ஆனால், அவருக்கும் சலித்து விட்டது போலும்... நல்ல நிர்வாகியாகவே எவ்வளவு காலம் அறியப்படுவது? நாமும் அரசியல்வாதியாக அறியப்பட வேண்டாமா என்று கருதினார் போலும்... நடந்து முடிந்த டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் சற்று வீராவேசமாக உரையாற்றிய மன்மோகன், “தேவைப்பட்டால் பாராளுமன்ற பொது கணக்கு குழு முன்பு ஆஜராகத் தயார்.... ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டும் தேவை இல்லை” என்று வீர வசனம் பேசி இருக்கிறார்.
நமது அப்பாவி மக்களும், “அடடா, பிரதமர் எதையும் மறைக்க விரும்பவில்லை என்பதால் தானே இப்படி துணிச்சலாக அறிவித்து உள்ளார்...!” என்று சிலாகித்துப் பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால், அவர்கள் சற்றே சிந்தித்துப் பார்க்கத் தவறிய விஷயம் என்ன தெரியுமா? பிரதமர் இப்படி அறிவித்து இருப்பது சராசரி அரசியல்வாதிகள் அன்றாடம் விடுக்கும் வாய்ச்சவடால்கள் தான் என்பதை...!
இவ்வளவு வீரவசனம் பேசுவதை விதித்து, பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு சம்மதிக்கலாமே? மீண்டும் கணக்கு குழுவே போதும் என்று கூறுவது எதனால்? ஏனென்றால், கணக்கு குழுவுக்கும் கூட்டுக்குழுவுக்கும் உள்ள வித்தியாசம், செசன்ஸ் கோர்ட் அதிகாரத்துக்கும் சுப்ரீம் கோர்ட் அதிகாரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றது. அதை சாமர்த்தியமாக மறைத்து விட்டு, வெறும் வாய்ச்சவடாலில் ஈடுபடுவது என்பது சாதாரண அரசியல்வாதியின் செயல் அல்லாமல் வேறு என்ன?
இப்படி வெற்று சவால் விடும் பிரதமர், தனது கண் முன்பே நடந்த மெகா கொள்ளையை தடுக்க இயலாதது மட்டுமின்றி, இரண்டு வருடமாக அதை மறைக்கத்தானே உதவி செய்தார்? சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை விடுத்த பின்னர்தானே ராஜாவை ராஜினாமா செய்ய சொன்னார்? இப்போது சி.பி.ஐ. காட்டும் வேகம் (இதுவும் பாவலாவோ என்னவோ) இரண்டு வருடமாக எங்கே போச்சு? மேலிடம் அனுமதி தராதது தானே காரணமாக இருக்க முடியும்?
இதை எல்லாம் சாமர்த்தியமாக மறைத்து விட்டு, வெறும் வாய்ச்சொல்லில் வீரம் காட்டும் மன்மோகன்சிங்கும் அரசியல்வாதியாக மாறிவிட்டார்தானே?

Saturday, December 4, 2010

ஜாதி இரண்டொழிய வேறில்லை... நேர்மை ஜாதி; ஊழல் ஜாதி...!

“ஜாதி” என்பது இந்தியாவின் மிக மோசமான அடையாளம் மட்டுமல்ல, அபாயகரமான ஆயுதமும் கூட...! அதிலும் தமிழக முதல்வர் கருணாநிதி அதை கையாளும் விதமே அலாதியானது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எழும் போதெல்லாம் “உயர்ஜாதி”யினரின் சதி என்று கூப்பாடு போடுவதும், தனது குடும்பம் சம்பந்தம் வைக்க வேண்டும் என்றால் மட்டும் உயர்குடியை தேடி அலைவதும் அவருக்கு கைவந்த கலை!
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுமார் ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டு, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் முகத்தில் உமிழாத குறையாக, கிட்டத்தட்ட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக அமைச்சரவையில் இருந்து ராஜா வெளியே அனுப்பப்பட்டதற்கு, கருணாநிதி கூறும் காரணம்,ராஜா ஒரு தலித் என்பதால் அவர் பழிவாங்கப்படுகிறாராம்... வழக்கம் போல இதற்கு பக்க வாத்தியம் வாசிக்கும் வேலை வீரமணிக்கு...
ராஜாவோடு இந்தப் பிரச்சினையில் அவர் ஒப்பிடுவது பொருளாதார மேதை பெரியவர் டி.டி.கே.வோடு! இந்தியாவின் முதல் நிதி மந்திரியாக அவர் பதவி வகித்தபோது, முந்த்ரா என்ற நஷ்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கம்பெனி பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கிய விவகாரத்தில், தனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாதபோதும் கூட, தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்த அந்தப் பெரியவரை, அவர் உயர் ஜாதியை சேர்ந்தவர் என்பதால் விட்டு விட்டார்களாம்.
ஒப்பிடுவதற்கும் ஒரு தகுதி வேண்டாமா? தனது பதவி காலத்தில் டி.டி.கே. அவர்கள் செய்த சாதனைகள் ஒன்றா இரண்டா? இன்றும் மிகச்சிறப்பாக திகழும் யூனிட் டிரஸ்ட், தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், தண்டகாரண்யத் திட்டம், நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு பென்ஷன் கிடைக்க வழிவகை செய்த மாபெரும் திட்டம்... இன்னும் எண்ணற்ற சாதனைகளை செய்த அவர் எங்கே? பிரதமரின் எச்சரிக்கையையும் அலட்சியப்படுத்தி விட்டு நாட்டின் வளத்தை ஒரு குடும்பத்தின் லாபத்திற்கு திருப்பி விட்ட கேவலத்தை மட்டுமே செய்த ராஜா எங்கே? ஜாதியை மட்டுமே சொல்லி தப்பிக்கும் நிலையை எல்லாம் ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் தாண்டி விட்டது என்பது கருணாநிதியின் மனதுக்கே தெரிந்திருந்தாலும், வெட்டி கூச்சலிட்டு எதாவது செய்ய முடியுமா என்று தவிக்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பதவி இழந்த அசோக் சவான் தலித்தா? இல்லை, சுரேஷ் கல்மாடி தான் தலித்தா? அன்றைக்கு ஒரு தமிழன் என்று கூட பார்க்காமல் ஓ.வி. அழகேசன் அவர்களை, அரியலூர் ரெயில் விபத்திற்காக தார்மீக பொறுப்பேற்று பதவி விலகியேத் தீரவேண்டும் என்று கோஷமிட்டார் கருணாநிதி, அது ஜாதி அடிப்படையிலா?
பச்சைத் தமிழர் என்று பெரியாரே வாய் நிறைய பாராட்டிய காமராஜ் ஆட்சியை கவிழ்க்க ராஜாஜி உதவியைக் கேட்கும்போது மட்டும் அவர் மூதறிஞராக காட்சி அளித்தது எப்படி? அதற்கு முன்பு அதே ராஜாஜி பிடிக்காதவராக இருந்தபோது மட்டும் அவர் ஜாதி கண்ணில் பட்டது; அவரை கோணல் புத்திக்காரர், குல்லுகப் பட்டர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி ஏசியவரும் இதே கருணாநிதிதான்!
தன்னுடைய பேரன்- பேத்திகள் இன்று மணம் முடிப்பதெல்லாம் பார்ப்பன குடும்பங்களில் என்பது கருணாநிதி குடும்பத்தை அருகில் இருந்து கவனிப்பவர்களுக்கு நன்றாகவேத் தெரியும். அங்கெல்லாம் மட்டும் இவருக்கு பார்ப்பனீயம் இனிப்பதின் மர்மம் என்னவோ?
சமீபத்தில் திடீரென நேரு குடும்பத்துக்கும் எனக்கும் நெடிய உறவு என்று சொந்தம் கொண்டாடினாரே, அந்த நேருவும் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்... ஆம்! காஷ்மீர் பண்டிட் தான்!
எனவே, தனக்கு தேவைப்படும்போது மட்டும் கையில் எடுத்துக் கொள்ளும் அந்த உளுத்துப்போன ஜாதீய வாதத்தை உடப்பில் போட்டு விட்டு, யதார்த்தத்துக்கு வருவது அவருக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் மிக மிக நல்லது! ஆம்... ஜாதி இரண்டொழிய வேறில்லை... அது ஊழல் ஜாதி மற்றும் நேர்மை ஜாதி. இதில் கருணாநிதி எந்த ஜாதி என்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே நன்கு தெரியும்!

வெளிச்சம் தேடும் பயணம்...!

வணக்கம்! சவுக்கடிக்கு விஜயம் செய்து வெகுநாட்களாகி விட்டது. எழுதுவதற்கு செய்திகள் எதுவும் இல்லாமல் இல்லை. நமக்கு அந்த சிரமத்தை அரசியல்வாதிகள் கொடுப்பது இல்லை. அதிலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் நாம் எல்லாம் ஜனநாயக நாட்டில்தான் வசிக்கிறோமா, இல்லை மன்னராட்சியில் அடிமைகளாக இருக்கிறோமா என்ற சந்தேகத்தை அடிக்கடி உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.
“நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்ற வீரவசனம் பேசிக்கொண்டிருந்த ராஜா, வேறு வழியே இல்லை என்ற நிலையில் அவரை வீட்டுக்கு அனுப்பிய பிரதமரின் தொடர் மவுனம், ஊழல் வழக்கில் சிக்கி உள்ள பி.ஜே. தாமஸ் என்பவரே ஊழல் கண்காணிப்பு தலைமை அதிகாரி பொறுப்பில் இருப்பது, ராடியா டேப் விவகாரம், தி.மு.க.வினருக்கு மத்திய அமைச்சரவையில் என்னென்ன பதவிகள் பெற வேண்டும் என்பது தொடர்பாக பதவி புரோக்கர் ராடியாவுக்கும் முன்னணி செய்தியாளர் என்ற போர்வையில் உலா வரும் பர்கா தத்துக்கும் இடையே நடைபெற்ற ரகசிய பேச்சுக்களின் டேப், இந்த டேப் விவகாரங்களில் உள்ள அழுக்கை கங்கை மாசுவுடன் ஒப்பிட்டு மனம் குமுறி இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்;
வழக்கம் போல, பிரச்சினை என்று வரும்போது மட்டும் தலித் முத்திரையை கையில் எடுத்துக் கொள்ளும் கருணாநிதி, தங்களை எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைப்பார்களோ என்ற பதைபதைப்பில் இருக்கும் ராஜா- கனிமொழி, நடப்பதை பொறுமையாக கவனிப்போம் என்றிருக்கும் அழகிரி- ஸ்டாலின், ஊழலில் எங்கள் பங்கு இல்லாவிட்டால் எப்படி என்று தங்கள் பங்குக்கு எடியூரப்பாவை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா, நல்லாட்சி மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிதிஷ்குமார்... இப்படி எழுத வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
எழுத்துப்பசிக்கு இரை போடும் விஷயங்கள் என்பதை விட, நமது நாடு போகும் பாதையை நினைத்து ஆதங்கப்படும் நிலைதான் உள்ளது. ஆனால், வெறும் ஆதங்கமாக மட்டும் அல்லாமல், இந்தப் பிரச்சினைகளில் உண்மையையும், வெளிச்சத்தையும் தேடும் பயணமாகத்தான் இந்த எழுத்துக்கள் இருக்கும்....!