Monday, September 20, 2010

ஒழுங்காக வரி கட்டுபவன் இளிச்சவாயனா?

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டின் கோரப்பசிக்கு இரையான ஜப்பான், அடுத்த இருபது ஆண்டுகளிலேயே பீனிக்ஸ் பறவையாக சிலிர்த்தெழுந்து, உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கியது- விளங்குவது அவர்களது ஈடு இணையற்ற கடின உழைப்புதான்!
இதற்கு நேர்மாறாக ஒரு நாட்டை உதாரணமாக சொல்ல வேண்டுமானால், இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டை, தைரியமாக சொல்லலாம். இலவச வீட்டு மனை, இலவச வீடு, இலவச டெலிவிஷன், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, ஒரு ரூபாயில் அரிசி, ஐம்பது பைசாவுக்கு மளிகை பொருட்கள், இலவச கியாஸ் அடுப்பு, இலவச மொபைல் போன், இது இலவசம், அது இலவசம் என்று மக்களை முழு சோம்பேறிகளாக்க என்னென்ன செய்யவேண்டுமோ, அவ்வளவும் இங்கே செய்யப்படுகிறது.
தன் பங்குக்கு மைய அரசும் ஒரு திட்டத்தை அறிவித்தது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளியோருக்கு வருடத்திற்கு நூறு நாட்களுக்கு கட்டாயம் வேலையும், அதற்கு நூறு ரூபாய் சம்பளமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திட்டத்தின் நோக்கம் நல்லவிதமாக இருந்தாலும், செயல்பாட்டில் வழக்கம் போல ஊழல் புரையோடி விட்டது.
பெரும்பாலும் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் நீர்நிலைகளை தூர் வாருதல் போன்ற வேலைகளாகத்தான் இருக்கும். ஒவ்வொரு கிராமத்திலும் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரை இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களாக கணக்கு காட்டி, அவர்களுக்கு அறுபது ரூபாயும், அரசியல்வாதிகள்- அதிகாரிகள் கூட்டணி நாற்பது ரூபாயும் எடுத்துக் கொள்வது சர்வ சாதாரண நிகழ்வு ஆகி விட்டது.
இந்த அறுபது ரூபாய்க்கு அவர்கள் எந்த வேலையும் செய்வதில்லை. வேலை நடந்த மாதிரி எழுதிக் கொள்ள அதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன?
ஏற்கனவே இருபது ரூபாய்க்கு இருபது கிலோ அரிசி, ஐம்பது பைசாவுக்கு மளிகைப் பொருட்கள், பிள்ளைகளுக்கு பள்ளியில் முட்டையுடன் சாப்பாடு... இது போதாதா? அரசு கொடுத்த கலர் டி.வி.யில், அவர்களது குடும்பத்து கேபிளுக்கு மட்டும் மாதம் நூறு ரூபாய் கட்டிவிட்டு, ஆனந்தமாக சீரியல் பார்த்துக் கொண்டு, வெட்டியாக பொழுது போக்கிவிடலாமே....? எதற்கு விவசாயக் கூலி வேலைக்கு போக வேண்டும்?
கடந்த தேர்தலில் தமிழகத்தைப் பார்த்து, குஜராத்தில் காங்கிரஸ் கட்சி “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்” திட்டத்தை அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்க நரேந்திர மோடி என்ன இலவச திட்டம் அறிவிக்கப் போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் எல்லோரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், மோடியின் அறிவிப்பு என்ன தெரியுமா? “குஜராத்திகள் இலவசங்களை எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்கள் அல்ல. உழைத்துப் பிழைக்கும் மானமுள்ளவர்கள் குஜராத் மக்கள்; எனவே, நான் எந்த இலவசத் திட்டங்களையும் அறிவிக்க மாட்டேன். குஜராத் விவசாயிகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க நான் உறுதி அளிக்கிறேன். அதற்கு பதிலாக நியாயமான கட்டணத்தை அவர்கள் கட்டி விடுவார்கள்” என்று அறிவித்த மோடி தான், தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.
ஒவ்வொரு குஜராத்தியும் தமிழனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இலவசங்களை எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்கார்கள் என்றுதானே நினைப்பார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழே அல்லாடும் மக்களுக்கு உதவி செய்வதை யாரும் தவறு என்று சொல்லமாட்டார்கள். ஆனால், இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள டி.வி.யை அரசு பணத்தில் இலவசமாக கொடுத்து விட்டு, கேபிள் கட்டணமாக தனது பேரன்களின் கேபிள் கம்பெனிக்கு வருடத்திற்கு 1200 ரூபாய் வருமானம் வர வழிசெய்து கொடுப்பதை சமூக அக்கறை உள்ள திட்டம் என்று சொன்னால், மூளை உள்ளவர்கள் சிரிக்காமல் என்ன செய்வார்கள்?
இப்போது தன் பங்குக்கு மைய அரசும் அடுத்த கேலிக்கூத்தை அரங்கேற்ற யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மானிய விலையில் (இப்போதுள்ள விலையில்) கியாஸ் சிலிண்டர் வழங்கவும், வருமான வரி கட்டுபவர்களுக்கு மானியம் இல்லாமல் உற்பத்தி விலைக்கே (சுமார் எழுநூறு ரூபாய்) கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்...
வரி ஒழுங்காக கட்டுபவர்களுக்கு எல்லா நாடுகளிலும் பல்வேறு சலுகைகள் இருக்கும்; நமது நாட்டில் மட்டும் மேலும் மேலும் சுமையை ஏற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசு என்ன செய்தி சொல்ல வருகிறது...? “ஏன் வேலை செய்து கஷ்டப்படுகிறீர்கள்? நாங்கள் குடுக்கும் இலவசங்களை பிச்சையாக வாங்கிக் கொண்டு, சோம்பேறிகளாகவே வாழ்க்கையை ஓட்டுங்கள்” என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஓட்டுக்காக அள்ளி விடப்படும் வெட்டி இலவசங்களை குறைத்தால், அத்தியாவசிய மானியங்களை எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் குடுக்க முடியும்... ஆனால், இலவச டி.வி.க்கள் பெற்றுத்தரும் ஓட்டுக்களை நல்ல திட்டங்கள் பெற்றுத் தராது என்பது இவர்களின் அழுத்தமான நம்பிக்கை ஆயிற்றே!

No comments:

Post a Comment