Saturday, September 18, 2010

ஏழையின் உயிர் என்றால் இளப்பமா?

இளமையில் வறுமை என்பது கொடியதிலும் மிகப்பெரிய கொடுமை. சிறு குழந்தையாக இருக்கும்போதே தாயை இழந்து, குடிகார தகப்பனின் ஆதரவை இழந்து, பாட்டியின் பராமரிப்பில், நடைபாதை குடிசையில் வளர்ந்தாலும், தனக்கென்று ஒரு லட்சியம்; அதை அடையத் தேவையான உறுதி; இலக்கை எட்ட கடும் உழைப்பு; பள்ளியில் முதலிடம்... ஆனால், காலனை வெல்லும் சூட்சுமம் மட்டும் விளங்கவில்லை...
ஆம்! 14 வயதே நிரம்பிய கஜலட்சுமி என்ற அந்த இளம்பெண், ஏழ்மைக்கே விதிக்கப்பட்ட அனைத்து சாபக்கேடுகளுடன், அந்த வயதுக்கு மீறிய மன உறுதியுடன் போராட்டம் நடத்தி வந்தாள். மாநகராட்சி பள்ளியில் படித்தாலும், புத்திக்கூர்மையுடன் சக மானவிகளுக்கே பாடம் சொல்லி கொடுக்கும் அளவுக்கு சிறப்பாக படித்து வந்தாள். தனது பேத்திக்கு நல்வாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு கஜலட்சுமியின் பாட்டி தள்ளாத வயதிலும் உழைத்து வந்தார்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அத்தனை இந்தியர்கள் இடம்பிடித்து விட்டார்கள்; இவ்வளவு வளர்ச்சிப் பெற்று விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் இதே நாட்டில்தான் கஜலட்சுமி போன்ற கோடிக்கணக்கானோர் இன்னமும் நடைபாதையில் வசிக்க வேண்டிய அவலம்... இவர்களுக்கு குடிப்பதற்கு வேண்டிய தண்ணீரை பிடித்து வைத்துக்கொள்ள இரவு இரண்டு மணி வரை விழித்திருக்க வேண்டும். ஆம்! அப்போதுதான், அருகில் உள்ள மாநகராட்சி குழாயில் தண்ணீர் வரும்... என்ன செய்ய, கோபாலபுரத்துக்கு இருபத்திநாலு மணி நேரமும் சேவை செய்வது ஒன்றுதானே நமது அதிகாரிகளின் வேலை!
இரண்டு மணிக்கு தனது பாட்டி மற்றும் பக்கத்து வீட்டு பெண்மணியுடன் சேர்ந்து குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த கஜலட்சுமியின் எண்ணமெல்லாம் சீக்கிரம் வேலையை முடித்துக் கொண்டு சில மணி நேரங்கள் தூங்கினால்தானே, காலையில் பள்ளிக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்பதைத் தாண்டி என்ன இருந்திருக்க முடியும்...?
ஆனால், குடிமகன்கள் இரண்டு பேர் அடித்திருந்த தண்ணி அவளுக்கு நிரந்தர தூக்கத்தை அளிக்கப் போகிறது என்பதை எப்படி அறிந்திருக்க முடியும் அந்த பிஞ்சு உள்ளத்தால்...?

செல்வச்செழிப்பில் பிறந்து, சீமான்களாக வளரும் சில உயர்குடி பிள்ளைகள், விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு, நள்ளிரவில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் அரை இருட்டில், ஒரு கையில் மது கிண்ணமும், மறுகையில் ஒட்டுமொத்த உடலழகையும் காட்டுவதற்கென்றே சிக்கென்ற உடையில் சுழன்றாடும் இளம்பெண்ணுமாக நேரத்தை செலவிடுவது மட்டுமே வாழ்க்கை என்ற சித்தாந்தத்தில் உள்ளனர். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்... ஆனால், எல்லா கொண்டாட்டங்களுக்குப் பிறகு, அதே குடிபோதையுடன் அதிவேக நவீன கார்களில் மின்னல் வேகத்தில் சாலைகளில் பறப்பது எந்தவிதத்தில் நியாயமாகும்?
லயோலா கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் 19 வயதே நிரம்பிய, சீமான் வீட்டுப் பிள்ளைகள் இரண்டு பேர் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் மூக்குமுட்ட குடித்து விட்டு, ஹோண்டா சிட்டி காரை தாறுமாறான வேகத்தில் ஓட்டி வந்து, போதையின் மயக்கத்தில் அதை கட்டுப்படுத்த முடியாமல், நடைபாதையில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி, இரண்டு பேர் உயிரை பலிவாங்கி விட்டனர்.
தங்களுடைய அந்தஸ்து, பணபலம் ஆகியவற்றின் உதவியோடு பெரிய தண்டனை ஏதுமின்றி இவர்கள் நிச்சயம் தப்பிக்கத்தான் போகின்றனர். காரில் ப்ரேக் திடீரென வேலை செய்யவில்லை என்பது போன்ற சினிமாத்தன காரணங்களை சொல்லி எளிதாக வெளியே வந்துவிடுவார்கள்.
ஆனால், ஏழையாய் பிறந்தாலும், எதிர்கால கனவுகளை நெஞ்சமெல்லாம் தேக்கி, நன்றாக படிப்பதன் மூலம் தன்னாலும் சமூகத்தில் நல்லதொரு நிலையை எட்ட முடியும் என்று வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளஞ்சிட்டை ஈவு இறக்கம் இன்றி கொன்றுவிட்ட குற்றஉணர்ச்சி இவர்களை நிம்மதியாக தூங்க விடுமா?
ஒருவேளை, இன்னும் அதிகமான போதை மயக்கத்தில் இவர்கள் நிம்மதியாக தூங்கவும் கூடும்... இன்னும் இதுபோன்ற அநியாயங்களை மீண்டும் செய்யவும் கூடும்... ஆனால், இவர்களைப் பெற்றவர்களுக்கு கூடவா புத்திர சோகம் என்பது என்னவென்று தெரியாது?
அதுசரி, இளம்வயதிலேயே பிள்ளைகள் குடிப்பழக்கத்துக்கு ஆளாவது கூட இவர்கள் கற்றுக்கொடுத்த பழக்கமாகத்தானே இருக்கும்? விழாக்கள், கொண்டாட்டங்கள் என்றால், மது மயக்கத்தில் ஆட்டம் போடுவது ஒன்றுதானே இவர்களுக்குத் தெரிந்த வழிமுறை? சிறுவயதில் இருந்தே இதைப் பார்த்து வளரும் பிள்ளைகள் மட்டும் வேறு எப்படி வளருவார்கள்?
உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்... நடைபாதையில் வசிப்பதாலேயே மட்டும் கஜலட்சுமியின் உயிர் இளப்பம் என்று கருதும் பொறுப்பற்ற இந்த சமூகத்தைக் காணும்போது.... நெஞ்சு பொறுக்குதில்லையே....!

No comments:

Post a Comment