Sunday, September 26, 2010

பார்க் ஷெரட்டன், BMW CAR , ஒரு இளம்பெண்...


புகார் கொடுக்கவில்லை என்றால் கொலையும் நியாயம்தானோ?
“நள்ளிரவில் பார்க் ஷெரட்டன் ஓட்டல் வாசலில் BMW காரில் நான்கு வாலிபர்கள், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சித்த போது, கால் டாக்ஸி டிரைவர்கள் தலையிட்டு அந்தப் பெண்ணை மீட்டனர். வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்; அந்தப் பெண் புகார் கொடுக்க முன்வராததால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. 11 மணிக்கு மேல் மது பரிமாறிய குற்றத்துக்காக ஓட்டல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்”
-இன்று காலை ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான செய்தி இது...
ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் 11 மணிக்கு மேல் மது சப்ளை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்... இங்கு வரும் இளைஞர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுடைய பிள்ளைகள்தான்! கண்மண் தெரியாமல் குடித்து விட்டு, பெண்கள் என்ற பெயரில் நள்ளிரவுகளில் மட்டும் உலவும் சில ஜென்மங்களை அழைத்துக் கொண்டு, விலை உயர்ந்த கார்களில் மின்னல் வேகத்தில் சென்னை சாலைகளில் பறப்பது தான் இவர்களின் பொழுதுபோக்கு!
இந்தப் பொழுதுபோக்குக்கு அவ்வப்போது பலியாவது நடைபாதைவாசிகள் தான்! கடந்த வாரம் கூட தேனாம்பேட்டையில் இரண்டு உயிர்கள் இந்த வகையில் பலி கொடுக்கப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னர், NEPC நிறுவனங்களின் அதிபரின் பதினாறு வயது மகன் பென்ஸ் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று நடைபாதையில் உறங்கிய 11 பேர் மீது ஏற்றியதில், அதே இடத்தில் மூன்று பேர் உயிர் இழந்தனர். இந்த வழக்கில் இன்னும் எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.
சரி, சனிக்கிழமை நள்ளிரவு பார்க் ஷெரட்டன் ஓட்டல் வாசலில் நடந்த விஷயத்துக்கு வருவோம்.... பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காததால், எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். ஏதாவது ஏடாகூடம் ஆகி, அந்தப்பெண் கொலையாகி இருந்தால், வழக்குப்பதிவு செய்து இருப்பார்களா, மாட்டார்களா?
நள்ளிரவில் நடுரோட்டில் காருக்குள் வைத்து ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சிக்கும் செய்தி கிடைத்ததும் நடவடிக்கை எடுக்க வேண்டியது போலீசாரின் கடமை அல்லவா? அதிர்ஷ்டவசமாக கால் டாக்ஸி டிரைவர்கள் தலையீட்டால், அந்தப் பெண் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.
இதுபோன்ற தறிகெட்ட இளைஞர்களுடன், மதுவின் மயக்கத்தில், நள்ளிரவில் சுற்றித் திரியும் பெண் எப்படிப்பட்டவளாக இருப்பாள்? அவளுக்கு இது சரியான தண்டனைதான் என்று வாதிடுபவர்களும் உண்டு.
விலைமகளாகவே இருந்தாலும், அவளின் விருப்பத்திற்கு மாறாக அவளை துன்புறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை. நேற்று தப்பிச் சென்ற அந்த கேடு கேட்டவர்கள் மீண்டும் இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவர்களின் கொடும் செயல்களில் நல்ல குடும்பத்துப் பெண்கள் பாதிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
நள்ளிரவில் கூட நகைகளை அணிந்து கொண்டு பெண்கள் தனியாக செல்லும் காலம் வரவேண்டும் என்பதுதான் மகாத்மா காந்தியின் கனவு! குடித்து விட்டு கும்மாளம் போடும் இழிபிறவிகள் பெண்களிடம் எப்படி நடந்து கொண்டாலும், “புகார் வரவில்லை” என்ற காரணத்திற்காக நடவடிக்கை எடுக்காத நிலை அல்ல.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்” என்றான் முண்டாசுக் கவிஞன்... மடைமை செய்யும் மாதரையும் சேர்த்துக் கொளுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது... 

Thursday, September 23, 2010

“இலவச” அரசுக்கு, உயிரும் இலவசம்தானோ ?

தமிழகத்தில் வெகு வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் தடுப்பு ஊசி கட்டணத்தை மேலும் 25 ரூபாய் ஏற்றி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த ஊசியை இலவசமாக போட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட வழக்கில், பத்து லட்சம் ஏழைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிதி இலாகாவின் பரிசீலனையில் இருப்பதால் அரசு ஆணைக்காக காத்திருப்பதாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அது என்னமோ தெரியவில்லை, மக்களை பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளில் உடனடியாக முடிவெடுக்க மட்டும் ஆட்சியாளர்களுக்கு மனமே வரமாட்டேங்குது... சினிமாக்காரர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் விஷயத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளில் காட்டிய வேகத்தை, ஏழைகளின் உயிரைக் காக்கும் விஷயத்தில் காட்ட ஏனோ மனம் வரமாட்டேங்குது. அதிகாரபூரவமாக மட்டும் இதுவரை இந்த விஷக்காய்ச்சலுக்கு பதினோரு பேர் பலியாகி உள்ளனர்.

இந்தத் தடுப்போசியின் விலை 200 ரூபாயில் இருந்து இப்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு தரப்பில் கூறப்படுவது போல பத்து லட்சம் ஏழை மக்களுக்கு இலவசமாக ஊசி போட 22.5 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும். இதற்கு ஒப்புதல் கொடுக்க தீவிரமாக பரிசீலனை செய்யும் நிதி அமைச்சகம், அரைகுறையாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தின் மேற்கூரை செட் போட மட்டுமே இரண்டு கோடி ரூபாய் செலவழிக்க உடனடியாக ஒப்புதல் கொடுக்க முடிந்ததே, அது எப்படி?

ஒரு மிக முக்கியமான கட்டிடத்தின் மேற்கூரையை சினிமா செட் போடுவர்களை வைத்து செட் போட்டு திறப்புவிழா நடத்தப்பட்ட கேவலத்தையும் தமிழகம் பார்த்து விட்டது. அதற்கு இரண்டு கோடியை வீனாக்கத் துணிந்த நிதித் துறையால், மக்களின் உயிர் பிரச்சினைக்கு பணம் ஒதுக்க முடியவில்லையா?

அரசு சொல்லும் “ஏழை” மக்களின் ஒரு நாள் கூலியே 225 ரூபாய் இருக்காதே, பிறகு எப்படி அவர்களால், தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்?

கொலைகாரர்களால் வெட்டப்பட்டு, தன் கண்ணெதிரே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் உயிரைக் காப்பாற்ற முனையாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு, அவர் கண்ணில் தென்படாத ஏழைகள் உயிரா பெரிதாக தெரிந்துவிடப் போகிறது?

இலவசங்களினாலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அரசுக்கு ஏழைகளின் உயிரும் இலவசக் கணக்குதானே!

Wednesday, September 22, 2010

அமைதியைக் குலைக்கும் அயோத்"தீ”...


அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நாளை வழங்க இருக்கும் அயோத்தி பற்றிய தீர்ப்பு குறித்த பதற்றம் இப்போதே நாடு முழுவது பற்றிக்கொண்டு விட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொட்டே இருந்து வந்த அயோத்தி பிரச்சினை, பதினெட்டு வருடங்களுக்கு முன்பு பூதாகரமாக உருவெடுத்தது. வழக்கம் போல இதை ஆரம்பித்து வைத்ததும் அரசியல்வாதிகள்தான்!
இந்துக்களின் மிக முக்கிய கடவுளாக- ஆதர்ஷ புருஷனாகக் கொண்டாடப்படும் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்று பெரும்பான்மையான இந்துக்களால் அழுத்தம் திருத்தமாக நம்பப்படுகிறது. இப்போது சர்ச்சைக்குரிய இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் ஒன்று இருந்ததாதகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து படையெடுத்த வந்த பாபர், தான் பெற்ற வெற்றியின் நினைவுச்சின்னமாக, இந்தக் கோவிலை தகர்த்து விட்டு, அந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டி விட்டார்.
பல நூறு ஆண்டுகளாக இருந்த இந்த மசூதியை அகற்றி விட்டு, மீண்டும் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் நெடுங்காலமாக இருந்து வந்தது. 1992-ம் ஆண்டு அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரை விளைவாக இந்த மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாம் நாள் மிகவும் பதட்டமான நாளாகவே கடந்து செல்கிறது.
இந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்தான வழக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்தது.... 1992-ம் ஆண்டு சம்பவத்திற்குப் பிறகு, பெரும்பாலான மக்கள் இதை மறந்துவிட்ட நிலையில், நாளை தீர்ப்பு வெளியாகப் போகிறது என்பதால் மீண்டும் நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எப்படியும் கலவரம் மூளலாம் என்ற பயம் எல்லா மாநிலத்திலும் நிலவுகிறது.
ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை அகற்றி விட்டு மசூதி கட்டிவிட்டனர் என்று இந்து அமைப்பினரும், மசூதியை எப்படி இடிக்கலாம் என்று முஸ்லிம் அமைப்பினரும் வாதிடுகின்றனர். ஆனால், இருதரப்பினருமே இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தானே என்று கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆதிகாலத்தில் “மதம் பிடித்து திரிந்த மனிதனை முறைப்படுத்த வந்ததுதான் மதம்! உலகின் எந்த மதமாக இருந்தாலும், அடிப்படையான சில கோட்பாடுகள் ஒன்றாகவே இருப்பதை நாம் காணலாம்.
இந்து மதம், யூத மதம், அதில் இருந்து உருவான கிருத்தவ மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் ஆகிய மதங்கள்தான் உலகம் முழுவதும் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. நமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எந்த மதமும் வன்முறையை ஆதரித்தது இல்லை.
ஆனால், மதத்தைப் பரப்பும் அல்லது காப்பாற்றும் முயற்சியில் நடைபெற்ற சிலுவைப் போர்கள், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் இன்றைக்கும் நடைபெறும் வன்முறைகள், அமைதி ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட புத்த மதம் பின்பற்றப்படும் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, வியட்நாம், மியான்மர் மற்றும் பல நாடுகளில் நடைபெற்ற வன்முறைகள் என உலகம் முழுக்க மதத்தின் பெயரால், வன்முறைகளும் கொலைகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
சரி, அயோத்திக்கு வருவோம்.... பாபர் செய்த வரலாற்று தவறைத்தான் சரி செய்கிறோம் என்று இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். சரி, வரலாற்றைத் திருத்துவது என்று முடிவு செய்துவிட்ட பிறகு, எந்த காலக்கட்ட வரலாறு வரை திருத்த வேண்டும் என்று யார் முடிவு செய்வது? தைமூர் படையெடுப்பின்போது இடிக்கப்பட்ட கோவில்களை எல்லாம் கண்டுபிடித்து மீண்டும் கட்ட முடியுமா? இதற்கு எல்லைதான் எது? எந்த ஒரு தவறையும் மற்றொரு தவறால் சரி செய்ய முடியாது.
இஸ்லாமிய மதம்தான் அந்நிய நாட்டில் இருந்து இங்கு வந்ததே தவிர, இஸ்லாமியார்களாக இன்று இருப்பவர்கள் எல்லோரும் காலம் காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வருபவர்கள்தான்... நமது சகோதரர்கள்தான்.... சாலைப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கோவில்களை அகற்றும்போதே இந்துக்கள் எவ்வளவு வருந்துகிறார்கள்...? அப்படி இருக்க மிகப்பெரிய மசூதி கண்ணெதிரே தகர்க்கப்பட்டதைக் கண்ட இஸ்லாமிய சகோதரர்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை ஒரு உண்மையான இந்துவாக என்னால் உணர முடிகிறது.
தவிர, இந்துக்கள் மிகவும் பெருமையாக சொல்லிகொள்ளும் விஷயமே சகிப்புத் தன்மையும், மன்னிக்கின்ற பாங்கையும்தான்! ராமாயணம்- மகாபாரதத்தில் எண்ணற்ற இடங்களில் இதை நம்மால் காண முடியும். மன்னிக்கும் மனம் உள்ளவனே தெய்வத்தின் நிலைக்கு உயர்கிறான் என்று காலம் காலமாக நமக்கு சொல்லித் தரப்பட்டு வந்துள்ளது.
அப்படி இருக்க, சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர், படையெடுப்பின் பொது ஒரு தனி நபர் செய்த தவறை இன்று திருத்துகிறேன் என்று கிளம்பினால், மக்களின் வாழ்க்கை முறை முழுவதுமாக மாறிவிட்ட இந்த காலக்கட்டத்தில் அது எந்தவிதமான மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இவர்கள் உணர மாட்டார்களா?
எந்த ஒரு மனிதனுக்கும் நிம்மதியான- அமைதியான- சந்தோஷமான வாழ்க்கை தான் குறிக்கோளாக இருக்க முடியும். எந்த ஒரு மதமும், மத குருவும் அதற்கான வழியைத்தான் காட்ட வேண்டும். அதை விடுத்து, ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டு, அதன்மூலம் எரியத் தொடங்கும் நெருப்பில் குளிர் காய்பவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் விட மனித உயிரும், நிம்மதியும் மிக முக்கியமான விஷயம். எனவே, தீர்ப்பு எப்படியாக இருந்தாலும், யார் எப்படி தூண்டி விட முயற்சித்தாலும் மக்கள் அமைதி காப்பது என்று முடிவெடுத்து விட்டால், இது பிரச்சினையாகவே இருக்காது.

Tuesday, September 21, 2010

இடிந்து விழுந்தது மேம்பாலம் அல்ல...இந்திய மானம்....

“காமன்வெல்த் போட்டிகள் நடக்கும் இடத்துக்கு அருகில் கட்டப்பட்ட மேம்பாலம் நேற்று இடிந்து விழுந்து 27 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதில் நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது”
ஏற்கனவே இடிந்து விழுந்து கொண்டிருந்த இந்தியாவின் மானம் இந்த சம்பவம் மூலம் நேற்று மேலும் பொடிப்பொடியாக உதிர்ந்து போனது. இடிந்து விழுந்த பாலம் வழியாகத்தான் தினமும் விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்குள் செல்ல வேண்டும். போட்டி தொடங்கிய பின்னர் இந்த பாலம் இடிந்து விழுந்து வெளிநாட்டு வீரர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தால், இந்தியா என்ன பதில் சொல்லி இருக்கும்? இப்போது பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள்தானே, யாருக்கு என்ன கவலை? டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், “இது சாதாரண மக்கள் நடக்கும் மேம்பாலாம்தான்” என்று அசட்டையாகத்தான் சொல்லி இருக்கிறார்.
போட்டி தொடங்கும் நேரம் நெருங்கி விட்ட நிலையில், பாலம் மட்டும் இடிந்து விழவில்லை, வீரர்கள் தங்கும் வீடுகள் லட்சணம் பற்றிய தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியர்களையும் தலைகுனிய வைத்துள்ளது.
வீரர்கள் படுக்க வேண்டிய படுக்கைகளில் தெரு நாய்கள் படுத்து இருந்த காட்சிகளும், திறந்தவெளி மைதானங்களில் காமன்வெல்த் அமைப்பின் ஊழியர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதையும், கழிப்பறைகளில் தண்ணீர் வெளியேற சரியான வசதிகள் செய்யப்படாததும், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த விளையாட்டு வீரர்கள், அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது.
கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் “இதைப் போன்ற மட்டமான- சுகாதாரக் குறைவான இடத்தை நாங்கள் பார்த்தது இல்லை” என்று கடுமையாக சாடி உள்ளனர். போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பி விடலாமா என்று கூட ஆலோசிக்கின்றனர்.
இவற்றை எல்லாம் பார்த்து வெட்கத்திலும், வேதனையிலும் உறைந்து போய் இருக்கும் மக்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் காமன்வெல்த் போட்டிகள் அமைப்பு மேயர், “இதெல்லாம் சாதாரண விஷயம்; இதற்கெல்லாம் வெட்கப்பட வேண்டியதில்லை; சுகாதாரக் குறைவு என்பதெல்லாம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும் விஷயம்” என்று மிகவும் அலட்சியமாக செய்தி சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் கூறி உள்ளார். வழக்கம் போல கடைசி நிமிடத்தில் பிரதமர் அலுவலகம் இந்த விஷயத்தில் தலையிட்டு உள்ளதாம்.
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவரும்போது எல்லாம், “இது நாட்டின் கவுரவப் பிரச்சினை; எனவே, பிரச்சினைகளைப் பெரிது படுத்தாமல் போட்டிகள் நல்லவிதமாக நடக்க உதவ வேண்டும்” என்று விளையாட்டு அமைச்சர் எம்.எஸ். கில்லும், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், காமன்வெல்த் போட்டி அமைப்பு தலைவர் சுரேஷ் கல்மாடியும் மீண்டும் மீண்டும் கோரஸாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
எதோ இந்த விளையாட்டு நடத்தவது என்பது இந்த மூன்று பேருடைய தனிப்பட்ட சாதனை என்பது போன்றே இவர்கள் காட்டிக் கொண்டனர். இது இந்திய தேசத்தால் நடத்தப்படும் போட்டி. இதற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. (இந்தப் பணத்தை வைத்து ஒலிம்பிக் போட்டிகளையே வெகு சிறப்பாக நடத்திவிட முடியும்). இந்திய நாடு நடத்தும் போட்டி என்ற வகையில், நியாயமாக பிரதமர்தானே இந்தப் போட்டிகளின் நன்மை மற்றும் தீமைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்?
எதோ ஒரு மூன்றாம் நபர் போலவே பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் நடந்து கொள்கின்றனரே, இவர்கள் சற்றே வரலாற்றை திரும்பிப் பார்ப்பார்களா? 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இதே டெல்லியில் நடத்திய பொது, இரண்டு வருடமே அவகாசம் இருந்த நிலையிலும், அன்றைக்கு இருந்து ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிக் குறைவுகளையும் மீறி, மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார், இந்திரா காந்தி. அவருக்கு உறுதுணையாக இருந்து போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து, உலக அரங்கில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்க வைத்தார், ராஜீவ்காந்தி.
இன்று, ஏழு வருட அவகாசத்துக்குப் பின்னரும், எல்லாவித தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்போதும், பட்ஜெட் என்று ஒன்று இல்லாமல் பணத்தை தண்ணீராக செலவழித்தும், இவ்வளவு கேவலமான நிலைமையில் இந்தியாவின் மானத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்களே, கொஞ்சமாவது தார்மீக பொறுப்பு இருந்திருந்தால் இவர்கள் ராஜினாமா செய்து இருக்க வேண்டாமா?
காமன்வெல்த் போட்டி என்ற பெயரில், கோடி கோடியாக கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இரண்டு மாதங்களுக்கு முன்பே எல்லா ஊடகங்களும் தெள்ளத்தெளிவான ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டினார்களே, அப்போதாவது பிரதமர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? எத்தனையோ திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ள இந்த நாட்டில் கல்மாடியை நீக்கினால் என்ன நடந்து விடும்? பிரதமருக்கு எதற்கு தயக்கம்? அவரை செயல்பட விடாமல் தடுத்தது எந்த சக்தி?
 “இதனை இவனால் முடியும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுரை சொன்னானே தெய்வப் புலவன், அவன் அறிவுரை காதில் விழவில்லை என்றால், இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரதமர் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யர், “காமன்வெல்த் போட்டிகள் என்ற பெயரில் மன்னிக்க முடியாத தவறுகள் நடக்கின்றன; உலக அரங்கில் நமக்கு பெரும் கெட்டப்பெயரை இது வாங்கித் தந்துவிடும். எனவே, போட்டி நடக்கும்போது நாட்டிலேயே நான் இருக்க மாட்டேன்” என்று கொதித்துப் போய் சொன்னாரே, அந்தக் கருத்துக்காவது செவி மடுத்திருக்கலாமே...?
எல்லா விதத்திலும் நம்மோடு போட்டி போடும் சீனா, எவ்வளவு அருமையாக- உலகமே வியந்து பாராட்டும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திக் காட்டினார்களே, அவர்கள் இப்போது நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிக்க மாட்டார்களா?
அரசியல் அசுத்தம் எதுவும் கலக்காத நேர்மையான மனிதர் என்று மக்களால் நம்பப்பட்ட மன்மோகன்சிங், எப்படியாவது பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்கும் வழக்கமான அரசியல்வாதியாக மாறிவிட்டதைப் பார்க்கும்போது, மிகவும் வருத்தமாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன்வெல்த் ஊழலும்- கையாலாகாத்தனமும் அவரை ஏழேழு ஜென்மத்துக்கும் துரத்துமே...! அதைப்பற்றியாவது அவர் கவலைப்படுவாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. நமக்கு அந்தக் கவலை நிச்சயம் இருக்கிறது.
“இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க ஏன் மறுக்கிறீர்கள்” என்று அப்போதைய இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலிடம் கேட்டபோது, அவர் என்ன பதில் கூறினாராம் தெரியுமா? “அந்த முட்டாள்களுக்கு ஆட்சி நடத்தவெல்லாம் தெரியாது; அவர்களிடம் எப்படி இவ்வளவு அருமையான நாட்டை ஒப்படைப்பது?” என்று கேட்டாராம்...
இங்கிலாந்து பிரதமருக்கு அன்றே தெரிந்த உண்மை இந்திய ஏமாளிகளுக்குத் தெரிந்திருந்தால், மன்மோகன்களும், கல்மாடிகளும், எம்.எஸ்.கில்களும் அட்டை போல பதவிகளில் ஒட்டிக்கொண்டு இருக்க முடியுமா? “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்...”

Monday, September 20, 2010

ஒழுங்காக வரி கட்டுபவன் இளிச்சவாயனா?

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டின் கோரப்பசிக்கு இரையான ஜப்பான், அடுத்த இருபது ஆண்டுகளிலேயே பீனிக்ஸ் பறவையாக சிலிர்த்தெழுந்து, உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கியது- விளங்குவது அவர்களது ஈடு இணையற்ற கடின உழைப்புதான்!
இதற்கு நேர்மாறாக ஒரு நாட்டை உதாரணமாக சொல்ல வேண்டுமானால், இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டை, தைரியமாக சொல்லலாம். இலவச வீட்டு மனை, இலவச வீடு, இலவச டெலிவிஷன், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, ஒரு ரூபாயில் அரிசி, ஐம்பது பைசாவுக்கு மளிகை பொருட்கள், இலவச கியாஸ் அடுப்பு, இலவச மொபைல் போன், இது இலவசம், அது இலவசம் என்று மக்களை முழு சோம்பேறிகளாக்க என்னென்ன செய்யவேண்டுமோ, அவ்வளவும் இங்கே செய்யப்படுகிறது.
தன் பங்குக்கு மைய அரசும் ஒரு திட்டத்தை அறிவித்தது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளியோருக்கு வருடத்திற்கு நூறு நாட்களுக்கு கட்டாயம் வேலையும், அதற்கு நூறு ரூபாய் சம்பளமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திட்டத்தின் நோக்கம் நல்லவிதமாக இருந்தாலும், செயல்பாட்டில் வழக்கம் போல ஊழல் புரையோடி விட்டது.
பெரும்பாலும் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் நீர்நிலைகளை தூர் வாருதல் போன்ற வேலைகளாகத்தான் இருக்கும். ஒவ்வொரு கிராமத்திலும் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரை இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களாக கணக்கு காட்டி, அவர்களுக்கு அறுபது ரூபாயும், அரசியல்வாதிகள்- அதிகாரிகள் கூட்டணி நாற்பது ரூபாயும் எடுத்துக் கொள்வது சர்வ சாதாரண நிகழ்வு ஆகி விட்டது.
இந்த அறுபது ரூபாய்க்கு அவர்கள் எந்த வேலையும் செய்வதில்லை. வேலை நடந்த மாதிரி எழுதிக் கொள்ள அதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன?
ஏற்கனவே இருபது ரூபாய்க்கு இருபது கிலோ அரிசி, ஐம்பது பைசாவுக்கு மளிகைப் பொருட்கள், பிள்ளைகளுக்கு பள்ளியில் முட்டையுடன் சாப்பாடு... இது போதாதா? அரசு கொடுத்த கலர் டி.வி.யில், அவர்களது குடும்பத்து கேபிளுக்கு மட்டும் மாதம் நூறு ரூபாய் கட்டிவிட்டு, ஆனந்தமாக சீரியல் பார்த்துக் கொண்டு, வெட்டியாக பொழுது போக்கிவிடலாமே....? எதற்கு விவசாயக் கூலி வேலைக்கு போக வேண்டும்?
கடந்த தேர்தலில் தமிழகத்தைப் பார்த்து, குஜராத்தில் காங்கிரஸ் கட்சி “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்” திட்டத்தை அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்க நரேந்திர மோடி என்ன இலவச திட்டம் அறிவிக்கப் போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் எல்லோரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், மோடியின் அறிவிப்பு என்ன தெரியுமா? “குஜராத்திகள் இலவசங்களை எதிர்பார்க்கும் பிச்சைக்காரர்கள் அல்ல. உழைத்துப் பிழைக்கும் மானமுள்ளவர்கள் குஜராத் மக்கள்; எனவே, நான் எந்த இலவசத் திட்டங்களையும் அறிவிக்க மாட்டேன். குஜராத் விவசாயிகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க நான் உறுதி அளிக்கிறேன். அதற்கு பதிலாக நியாயமான கட்டணத்தை அவர்கள் கட்டி விடுவார்கள்” என்று அறிவித்த மோடி தான், தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.
ஒவ்வொரு குஜராத்தியும் தமிழனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இலவசங்களை எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்கார்கள் என்றுதானே நினைப்பார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழே அல்லாடும் மக்களுக்கு உதவி செய்வதை யாரும் தவறு என்று சொல்லமாட்டார்கள். ஆனால், இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள டி.வி.யை அரசு பணத்தில் இலவசமாக கொடுத்து விட்டு, கேபிள் கட்டணமாக தனது பேரன்களின் கேபிள் கம்பெனிக்கு வருடத்திற்கு 1200 ரூபாய் வருமானம் வர வழிசெய்து கொடுப்பதை சமூக அக்கறை உள்ள திட்டம் என்று சொன்னால், மூளை உள்ளவர்கள் சிரிக்காமல் என்ன செய்வார்கள்?
இப்போது தன் பங்குக்கு மைய அரசும் அடுத்த கேலிக்கூத்தை அரங்கேற்ற யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மானிய விலையில் (இப்போதுள்ள விலையில்) கியாஸ் சிலிண்டர் வழங்கவும், வருமான வரி கட்டுபவர்களுக்கு மானியம் இல்லாமல் உற்பத்தி விலைக்கே (சுமார் எழுநூறு ரூபாய்) கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்...
வரி ஒழுங்காக கட்டுபவர்களுக்கு எல்லா நாடுகளிலும் பல்வேறு சலுகைகள் இருக்கும்; நமது நாட்டில் மட்டும் மேலும் மேலும் சுமையை ஏற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசு என்ன செய்தி சொல்ல வருகிறது...? “ஏன் வேலை செய்து கஷ்டப்படுகிறீர்கள்? நாங்கள் குடுக்கும் இலவசங்களை பிச்சையாக வாங்கிக் கொண்டு, சோம்பேறிகளாகவே வாழ்க்கையை ஓட்டுங்கள்” என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஓட்டுக்காக அள்ளி விடப்படும் வெட்டி இலவசங்களை குறைத்தால், அத்தியாவசிய மானியங்களை எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் குடுக்க முடியும்... ஆனால், இலவச டி.வி.க்கள் பெற்றுத்தரும் ஓட்டுக்களை நல்ல திட்டங்கள் பெற்றுத் தராது என்பது இவர்களின் அழுத்தமான நம்பிக்கை ஆயிற்றே!

Sunday, September 19, 2010

கொலையில் எங்கிருந்து வந்தது “கவுரவம்”...?


சமீப காலமாக வட இந்திய பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சி செய்திகளில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது “கவுரவக் கொலைகள்” குறித்த செய்திகள். தங்களது குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற மனைவியையோ மகளையோ கொல்வதுதான் ஒரே வழி என்ற ரீதியில் செய்யப்படும் கொலைகள்தான் இந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன.
கொலை என்பதே படுபாதகமான செயல்; இதில் கவுரவம் எங்கிருந்து வந்து ஒட்டிக்கொண்டது? என்னும் நியாயமான கேள்வி நம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த ரீதியிலான கொலைகள் பற்றிய செய்திகள் சில நாட்களாக தமிழகத்திலும் தென்படுவது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
“மதுரையில் சொந்த மகளையே விஷ ஊசி போட்டுக் கொன்ற தந்தை... சிவகங்கையில் காதல் கடிதம் எழுதிய மகளை விஷம் கொடுத்த தந்தை...” என இந்தப் பட்டியல் நீளுகிறது.
மனிதகுலம் தோன்றிய காலத்தில் இருந்தே ஆதாம்- ஏவாள்; அம்பிகாபதி- அமராவதி கதைகளை ஏராளமாக கேட்டு வளர்ந்தவர்கள்தான் நாம்! இரண்டு தூய்மையான உள்ளங்கள் ஒன்று சேருவதை இலக்கியங்களிலும், சினிமாக்களிலும் மெய்மறந்து ரசிக்கும் நமது மக்கள், தங்கள் வீட்டில் அந்த காதல் பூ மணப்பதை மட்டும் விரும்புவதில்லை.
தொலைத்தொடர்பு துறையின் அதீத வளர்ச்சியினாலும், உலகமயமாக்கல் மற்றும் இண்டர்நெட் போன்றவற்றினாலும் உலகமே உள்ளங்கையில் சுருங்கி விட்டது. அதேபோல், உலகமெங்கும் பெண்களின் கல்வியறிவு வெகுவாக முன்னேறி விட்ட காரணத்தினால் நகர்ப்புறங்களில் பழமைவாதம் என்பதும் நன்றாகவே குறைந்து விட்டது. இதனால் ஜாதி- மத ரீதியிலான பிரிவினைகள்- ஏற்றத்தாழ்வுகள் தவறு என்கின்ற விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரிக்கத்தான் செய்கிறது.
அதேபோல, பிற ஆண்களிடம் பேசுவதே தவறு என்று கருதும் போக்கில் இருந்து விடுபட்டு, ஆண்களும் பெண்களும் விகற்பம் இல்லாமல்- நண்பர்களாக பழகுவதை வெகு இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்று பெரும்பாலான பெற்றோர்களிடம் காணப்படுவதை நாம் குறிப்பிட்டுத்தான் தீரவேண்டும்.
இப்படி எல்லாவிதத்திலும் ஆண்- பெண் பேதம் என்பது குறைந்து, ஒத்த கருத்து உள்ள இருபாலர் பழகுவதை குதர்க்கம் இல்லாமல் பார்க்கும் மன நிலைக்கு சமூகம் முன்னேறி விட்டது- குறிப்பாக தமிழகம் அந்த நிலையை எட்டிவிட்டது என்று இறுமாந்து இருந்த நிலையில், சமீபத்திய செய்திகள் அந்த எண்ணத்தை சம்மட்டியால் அடித்து தகர்த்து விட்டது.
மனிதர்கள் எடுக்கும் முடிவுகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று அறிவு சொல்வதைக் கேட்டு எடுக்கப்படுவது; மற்றொன்று இதயம் சொல்படி நடப்பது...! இதயம் எப்போதுமே உணர்ச்சிகளின் கொந்தளிப்புகளுக்கு உட்பட்டது. அறிவோ, அனைத்துவித நல்லது கெட்டதையும் ஆராய்ந்து முடிவு எடுக்கும் தன்மை வாய்ந்தது.
கொலை செய்த தந்தைகள் நிச்சயமாக உணர்ச்சிவசப்பட்டு தான் இந்த பாதக செயலை செய்திருக்கின்றனர். தனது மகள் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி மொபைல் போனில் பேசுவதும், அவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவதும் தங்களது குடும்ப கவுரவத்துக்கு இழுக்கு என்பதாலேயே இந்த விபரீத முடிவை எடுத்து விட்டதாக சொல்லி இருக்கின்றனர். தங்களது மகள்களின் தவறான நடத்தையே தங்களை இந்த பாதக செயலில் தள்ளிவிட்டு விட்டதாக விசாரணையின்போது கூறி உள்ளனர். ஆனால், கொலை என்பது எதையும் நியாயப்படுத்திவிட முடியாது.
மும்பையில் கொலைத் தாண்டவம் ஆடிய கஸாப்புக்கு மரணதண்டனை விதிப்பதில் கூட எவ்வளவோ விதிமுறைகளையும், மரபுகளையும் நாம் பின்பற்றும் அதே வேளையில், இதுபோன்ற எவ்வளவோ கொலைகள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. போலீஸ் தரப்பில் கூறும்போது, “இது போன்ற எண்ணற்ற கொலைகள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. போலீஸ் கவனத்துக்கு வரும் குற்றங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்கின்றனர்.
தங்களது தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் உள்ள பழக்கவழக்க வித்தியாசங்களை புரிந்து கொள்ள இயலாமல்- புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யாமல் தங்களுடைய விருப்பப்படி மட்டுமே தங்களது குழந்தைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறான அணுகுமுறை என்பதையும், அதன் விளைவுகள் மிகவும் விபரீதமாக அமைந்துவிடக் கூடும் என்பதையும் பெற்றோர்களுக்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல, பெற்றோர்களுக்கு மனம் என்று ஒன்றே கிடையாது; தங்களுடைய சந்தோசம் ஒன்றே பிரதானம்; மொபைல் போன் கண்டுபிடித்ததே நண்பர்களுடன் அர்த்தம் இல்லாத பேச்சுக்களை பேசுவதற்காகத்தான் என்று குறிக்கோளே இல்லாமல் திரியும் பிள்ளைகளும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது நலம்!
தமிழர்கள் என்றாலே நாகரீகம் மிக்கவர்கள்; கருணையும் அன்பும் நிறைந்த அறிவாளிகள் என்ற நம்பிக்கையைத் தகர்த்திட வேண்டாம்!

Saturday, September 18, 2010

ஏழையின் உயிர் என்றால் இளப்பமா?

இளமையில் வறுமை என்பது கொடியதிலும் மிகப்பெரிய கொடுமை. சிறு குழந்தையாக இருக்கும்போதே தாயை இழந்து, குடிகார தகப்பனின் ஆதரவை இழந்து, பாட்டியின் பராமரிப்பில், நடைபாதை குடிசையில் வளர்ந்தாலும், தனக்கென்று ஒரு லட்சியம்; அதை அடையத் தேவையான உறுதி; இலக்கை எட்ட கடும் உழைப்பு; பள்ளியில் முதலிடம்... ஆனால், காலனை வெல்லும் சூட்சுமம் மட்டும் விளங்கவில்லை...
ஆம்! 14 வயதே நிரம்பிய கஜலட்சுமி என்ற அந்த இளம்பெண், ஏழ்மைக்கே விதிக்கப்பட்ட அனைத்து சாபக்கேடுகளுடன், அந்த வயதுக்கு மீறிய மன உறுதியுடன் போராட்டம் நடத்தி வந்தாள். மாநகராட்சி பள்ளியில் படித்தாலும், புத்திக்கூர்மையுடன் சக மானவிகளுக்கே பாடம் சொல்லி கொடுக்கும் அளவுக்கு சிறப்பாக படித்து வந்தாள். தனது பேத்திக்கு நல்வாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு கஜலட்சுமியின் பாட்டி தள்ளாத வயதிலும் உழைத்து வந்தார்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அத்தனை இந்தியர்கள் இடம்பிடித்து விட்டார்கள்; இவ்வளவு வளர்ச்சிப் பெற்று விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் இதே நாட்டில்தான் கஜலட்சுமி போன்ற கோடிக்கணக்கானோர் இன்னமும் நடைபாதையில் வசிக்க வேண்டிய அவலம்... இவர்களுக்கு குடிப்பதற்கு வேண்டிய தண்ணீரை பிடித்து வைத்துக்கொள்ள இரவு இரண்டு மணி வரை விழித்திருக்க வேண்டும். ஆம்! அப்போதுதான், அருகில் உள்ள மாநகராட்சி குழாயில் தண்ணீர் வரும்... என்ன செய்ய, கோபாலபுரத்துக்கு இருபத்திநாலு மணி நேரமும் சேவை செய்வது ஒன்றுதானே நமது அதிகாரிகளின் வேலை!
இரண்டு மணிக்கு தனது பாட்டி மற்றும் பக்கத்து வீட்டு பெண்மணியுடன் சேர்ந்து குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த கஜலட்சுமியின் எண்ணமெல்லாம் சீக்கிரம் வேலையை முடித்துக் கொண்டு சில மணி நேரங்கள் தூங்கினால்தானே, காலையில் பள்ளிக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்பதைத் தாண்டி என்ன இருந்திருக்க முடியும்...?
ஆனால், குடிமகன்கள் இரண்டு பேர் அடித்திருந்த தண்ணி அவளுக்கு நிரந்தர தூக்கத்தை அளிக்கப் போகிறது என்பதை எப்படி அறிந்திருக்க முடியும் அந்த பிஞ்சு உள்ளத்தால்...?

செல்வச்செழிப்பில் பிறந்து, சீமான்களாக வளரும் சில உயர்குடி பிள்ளைகள், விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு, நள்ளிரவில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் அரை இருட்டில், ஒரு கையில் மது கிண்ணமும், மறுகையில் ஒட்டுமொத்த உடலழகையும் காட்டுவதற்கென்றே சிக்கென்ற உடையில் சுழன்றாடும் இளம்பெண்ணுமாக நேரத்தை செலவிடுவது மட்டுமே வாழ்க்கை என்ற சித்தாந்தத்தில் உள்ளனர். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்... ஆனால், எல்லா கொண்டாட்டங்களுக்குப் பிறகு, அதே குடிபோதையுடன் அதிவேக நவீன கார்களில் மின்னல் வேகத்தில் சாலைகளில் பறப்பது எந்தவிதத்தில் நியாயமாகும்?
லயோலா கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் 19 வயதே நிரம்பிய, சீமான் வீட்டுப் பிள்ளைகள் இரண்டு பேர் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் மூக்குமுட்ட குடித்து விட்டு, ஹோண்டா சிட்டி காரை தாறுமாறான வேகத்தில் ஓட்டி வந்து, போதையின் மயக்கத்தில் அதை கட்டுப்படுத்த முடியாமல், நடைபாதையில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி, இரண்டு பேர் உயிரை பலிவாங்கி விட்டனர்.
தங்களுடைய அந்தஸ்து, பணபலம் ஆகியவற்றின் உதவியோடு பெரிய தண்டனை ஏதுமின்றி இவர்கள் நிச்சயம் தப்பிக்கத்தான் போகின்றனர். காரில் ப்ரேக் திடீரென வேலை செய்யவில்லை என்பது போன்ற சினிமாத்தன காரணங்களை சொல்லி எளிதாக வெளியே வந்துவிடுவார்கள்.
ஆனால், ஏழையாய் பிறந்தாலும், எதிர்கால கனவுகளை நெஞ்சமெல்லாம் தேக்கி, நன்றாக படிப்பதன் மூலம் தன்னாலும் சமூகத்தில் நல்லதொரு நிலையை எட்ட முடியும் என்று வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளஞ்சிட்டை ஈவு இறக்கம் இன்றி கொன்றுவிட்ட குற்றஉணர்ச்சி இவர்களை நிம்மதியாக தூங்க விடுமா?
ஒருவேளை, இன்னும் அதிகமான போதை மயக்கத்தில் இவர்கள் நிம்மதியாக தூங்கவும் கூடும்... இன்னும் இதுபோன்ற அநியாயங்களை மீண்டும் செய்யவும் கூடும்... ஆனால், இவர்களைப் பெற்றவர்களுக்கு கூடவா புத்திர சோகம் என்பது என்னவென்று தெரியாது?
அதுசரி, இளம்வயதிலேயே பிள்ளைகள் குடிப்பழக்கத்துக்கு ஆளாவது கூட இவர்கள் கற்றுக்கொடுத்த பழக்கமாகத்தானே இருக்கும்? விழாக்கள், கொண்டாட்டங்கள் என்றால், மது மயக்கத்தில் ஆட்டம் போடுவது ஒன்றுதானே இவர்களுக்குத் தெரிந்த வழிமுறை? சிறுவயதில் இருந்தே இதைப் பார்த்து வளரும் பிள்ளைகள் மட்டும் வேறு எப்படி வளருவார்கள்?
உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்... நடைபாதையில் வசிப்பதாலேயே மட்டும் கஜலட்சுமியின் உயிர் இளப்பம் என்று கருதும் பொறுப்பற்ற இந்த சமூகத்தைக் காணும்போது.... நெஞ்சு பொறுக்குதில்லையே....!

Friday, September 17, 2010

தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் பதவி போய்விடுமா?பகுத்தறிவுவாதிகளின் பரிகாரம்!


தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் தங்கள் முக்கிய கொள்கையாக அறிவித்து இருந்தது “பகுத்தறிவு கொள்கை”யைத்தான்! “கடவுளை நம்பாதே; வழிபாடுகள் எல்லாம் மூட நம்பிக்கைகள்; மரபு வழி பழக்கவழக்கங்கள் எல்லாம் நம்மை அடிமைப்படுத்தி வைக்க செய்யப்பட சதி; ஜோதிடம்- ராசி- நட்சத்திரம் இவை எல்லாம் ஏமாற்று வேலைகள்; கோவில்களே கொள்ளையர்களின் கூடாரம்” என்பன போன்றவைதான் பகுத்தறிவின் முக்கிய அம்சங்களாக சொல்லப்பட்டன.
ஆனால், காலப்போக்கில் இவை எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. குறிப்பாக, பதவிக்கு வந்த பின்னர் அதை தக்கவைத்துக் கொள்ள பெரும்பாலான தலைவர்கள் ரகசியமாக ஜோதிடத்தையும், கோவில் வழிபாடுகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பகிரங்கமாகவே மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். மவுண்ட்ரோட்டில் உடைக்கப்பட்ட தன்னுடைய சிலையை மீண்டும் நிறுவினால், தான் பதவிக்கு வரமுடியாது என்று நம்பிய கருணாநிதி, இதுகுறித்து வீரமணியிடம் பத்திரிகைகளில் பெரிய வாதப்போரே நடத்தினார். இன்று வரை அந்த சிலை மீண்டும் நிறுவப்படவில்லை. அதேபோல், மஞ்சள் துண்டுதான் தனக்கு மிகவும் ராசி என்று அவர் கருதுவதால், பகுத்தறிவை விட மஞ்சள் துண்டை பிடித்துக் கொள்வது நலம் என்பதில் இன்று வரை உறுதியாக உள்ளார்.
ஜெயலலிதாவைப் பற்றி கேட்கவே வேண்டாம்... எல்லாவித வழிபாடுகள், யாகங்களையும் விடாமல் செய்பவர் அவர். ஸ்டாலின் மனைவி துர்காவும் சாமி வழிபாடுகளில் மிகவும் ஆர்வம் உள்ளவர். இவர்கள் எல்லாம் சிறு உதாரணங்கள் தான். இரண்டாம் கட்டத் தலைவர்கள், குட்டித் தலைவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். பெரியார், அண்ணா வழிப்படி நடப்பதாக கதை விடும் இவர்கள் பகுத்தறிவு கொள்கையை பரணுக்கு அனுப்பி நெடுங்காலம் ஆகிவிட்டது.
இவர்களின் பகுத்தறிவு கபட நாடகத்தின் அடுத்த அத்தியாயம் இப்போது அரங்கேறி உள்ளது. தமிழக அரசியல்வாதிகளிடையே நீண்ட காலமாக ஒரு அபார நம்பிக்கை நிலவுகிறது. அதாவது, தஞ்சை பெரிய கோவில் பிரதான வாயில் வழியே உள்ளே வந்த தலைவர்களுக்கு பதவி பறிபோதலோ, ஆயுள் பாதிப்போ ஏற்படும் என்று அழுத்தம் திருத்தமாக நம்புகின்றனர். எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தி, முன்னாள் ஜனாதிபதி எஸ்.டி. சர்மா போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்கின்றனர்.
தஞ்சை பெரிய கோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் ஆனதை ஒட்டி பிரமாண்ட விழா நடத்த முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளார். ஆனால், இந்த விழாவில் கலந்து கொள்ள பிராதான நுழைவு வாயில் வழியாக கருணாநிதி வந்தால், அவரது பதவிக்கோ ஆயுளுக்கோ பிரச்சினை ஏற்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
பிரதான வாயில் வழியாக வந்தால்தானே பிரச்சினை வரும்; அதனால், அருகில் உள்ள பூங்கா வழியாக ஒரு பாதையை உருவாக்கி அதன் வழியாக உள்ளே நுழையலாம் என்று ஒரு “அற்புதமான யோசனையை” சொல்லி இருக்கின்றனர். இதனால் பூங்காவில் இருந்து கோவிலில் நுழைவதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெறுகின்றன.
தொல்லியல் துறையின்கீழ் பெரிய கோவில் உள்ளதால், அங்கு சிறிய கல்லை நகர்த்துவது என்றால் கூட அவர்களின் அனுமதி தேவை. ஆனால், இந்தப் பணிக்காக எந்த அனுமதியும் பெறவில்லை என்றே கூறப்படுகிறது.
பகுத்தறிவு பற்றி வாய் கிழிய பேசும் இவர்கள், தங்கள் பதவி- தங்கள் ஆயுள் என்று வரும்போது மட்டும் எல்லா பரிகாரங்கள்- நாள், நட்சத்திரம் எல்லாவற்றையும் பின்பற்றத் தொடங்கி விடுகின்றனர். அதுசரி, ஊருக்கு மட்டும் தானே, உபதேசம்!

வெற்றிகள் இல்லாமல் விழாக்களா?? பூச்சாண்டி காட்டும் எந்திரன்....

சில வருடங்களுக்கு முன்னால் வரை தமிழ் சினிமாவின் பாதை மற்ற மாநில சினிமா ஆட்களுக்கு முன்னோடியாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.
காலி பெருங்காய டப்பாக்கள்  எல்லாம் கல்லா கட்ட ஆரம்பித்திருக்கிறது விளம்பரங்களின் உத்தியால்.  நல்லவர்களுக்கு கிடைக்கும் மரியாதை  கெட்டவர்களுக்கும்   கிடைக்கும் போது ஒரு ஆதங்கம் ஏற்ப்படும் அல்லவா ? அதுதான் இது போன்ற சம்பவங்களில் நடக்கிறது.கூடவே அருவருப்பும்...

விளம்பரத்தால் விதியை கூட மாற்றி விடலாம் என்று தப்பு கணக்கு போடாமல் இருந்தால் போதும்.

வெளியாக போகிற எந்திரன் படத்திற்கான சித்து வேலைகள் எப்போதோ ஆரம்பமாகி விட்டது. எடுப்பது தமிழ் படம் என்றாலும் ஆங்கில படங்களுக்கு நிகரான வகையில் எடுக்க படுகிறது என்று விளம்பரம் வேறு....

பூனைக்கு எம்.எப்.ஹுசைன் வைத்து ஓவியம் தீட்டினால் புலியாக்கி விட முடியுமா என்ன ?

படத்துவக்க விழா, படப்பிடிப்பு முடிந்த விழா, பாடல் வெளியீட்டு விழா, பாடல் உருவான விழா, பின்னர் படம் எடுத்த விதம் பற்றிய விழா இப்படியே போய் விழா உருவான விழாவில் வந்து முடியலாம்.
இயக்குனர்களையும் கதாசிரியர்களையும் நம்பி பெரும்  வெற்றிகளை  குவித்த தமிழ் சினிமா, பின்னர் கதாநாயகன் , கதாநாயகி , காமெடியன்களை நம்பி எப்போதாவது வெற்றிகளை சந்தித்தது.
இப்போது அதையும் தாண்டி விளம்பரத்தை மட்டுமே நம்பி இடுப்பில் தாயத்து கட்டி கொண்டு இருக்கிறது.

சினிமாவில் புகழை மட்டுமே பார்த்துகொண்டிருந்த கூட்டம்  இப்போது காசையும் பார்க்க ஆரம்பித்தது தான் இந்த விபரீத போக்குக்கு காரணம்.

கார் நிறுத்த வேண்டிய இடத்தில் தேரை நிறுத்தினால் அதை நிறுத்தியவர்களுக்கு பெருமை கிடையாது. காரணம் பல பேர் இழுத்தால்தான் தேருக்கு பெருமை.
வெறும் விழாக்களை நடத்தி வெற்றிகளை தீர்மானிக்க முடியாது என்பதை நினைவில் கொண்டால் போதுமானது .

தமிழர்கள் எல்லோரும் சிறு வயதிலயே புலி வருது புலி வருது கதையை படித்தவர்கள்தான். அதனால் புலி வரும் போது கத்தினால்தான்  காப்பாற்றவாவது வருவார்கள் என்பது நாம் சொல்லாமலே புரிய வேண்டியவர்களுக்கு புரியும்....

காரணம்
எல்லாம் தெரிந்தவர்கள்தானே அவர்கள் ...கதை நன்றாக இருந்தால்தான் பாட்சா கூட வெற்றி அடையும்....இல்லாவிட்டால் பாபா கூட கந்தலாகும்... இத்தனை வருடம் சூப்பர்   ஸ்டார் பட்டத்தை தக்க வைத்திருப்பவருக்கு தெரியாத என்ன ?

Thursday, September 16, 2010

நீதிபதிகளின் கைகளே நீளமா....?மொரார்ஜி தேசாய் மந்திரிசபையில் சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்தவர், பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷன். இந்திராகாந்திக்கு எதிராக ராஜநாராயணன் தொடர்ந்த வழக்கில் சாந்தி பூஷன் ஆஜராகி மிகத் திறமையாக வாதாடியதால் இந்திராகாந்திக்கு எதிராக தீர்ப்பு அமைந்து, அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துதான் அவசரநிலை பிரகடன சட்டத்தை கொண்டு வந்தார், இந்திராகாந்தி.
சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இடையே நிலவும் லஞ்ச லாவண்யம் குறித்து தெகல்கா பத்திரிகையில் சாந்தி பூஷன் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அதிரடிக்கு பெயர்போன சாந்தி பூஷன் இன்றைக்கு மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பி இருக்கிறார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் 16 பேர் கொண்ட பட்டியல் ஒன்றை சமர்ப்பித்து உள்ளார். இதில் எட்டு தலைமை நீதிபதிகள் கண்டிப்பாக லஞ்சத்தில் ஊறித் திளைத்தவர்கள்; இரண்டு பேர் பற்றி சரியாகத் தெரியவில்லை; மீதம் ஆறு பேர் மட்டும் நேர்மையானவர்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இந்தப் பட்டியலை கொடுத்ததற்காக தன்னை சிறையில் தள்ளினாலும், அதையும் எதிர்கொள்ளத் தயார் என்று அறைகூவல் விடுத்துள்ளார், 85 வயதான இந்த சட்டப்புலி.
தங்கப்பதக்கம் திரைப்படத்தில் சிவாஜிகணேசன் கலங்கி நிற்கும்போது, அவரது மருமகளாக வேடத்தில் நடித்திருக்கும் பிரமிளா, “துன்பப்படுறவங்க எல்லாம் தங்களுடைய கவலையை தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க. அந்த தெய்வமே கலங்கி நின்னா, அந்த தெய்வத்துக்கு ஆறுதல் சொல்ல யாரால் முடியும்” என்பார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் நிலையே இப்படி இருந்தால், ஸ்பெக்ட்ரம்- காமன்வெல்த் ஊழல்களை யாரிடம் போய் முறையிடுவது?

Wednesday, September 15, 2010

திண்ணைப்பேச்சை விஞ்சும் அனைத்துக்கட்சி கூட்டம்!


எல்லா கிராமங்களிலும் வெட்டி பேச்சு பேசுவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கும். ஏதாவது ஒரு திண்ணையில் கூடி உள்ளூர் முதல் உலக விவாகரம் வரை இங்கு காரசாரமாக விவாதிக்கப்படும். இந்த விவாதங்கள் எந்த முடிவுகளையும் எட்டுவதற்கு அல்ல... மாறாக, அன்றைய பொழுதைக் கழிக்கும் வழி இது!
இப்போதெல்லாம் அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டங்களும் திண்ணைப் பேச்சு பேசும் கூட்டங்களாகவே மாறி விட்டன. சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினை ஆகட்டும் அல்லது கொந்தளித்துக் கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சினை ஆகட்டும் சம்பிரதாய கூட்டங்களாகவே மாறி விட்டன.
இயற்கை அழகு கொஞ்சும் காஷ்மீர் பள்ளத்தாக்கில், அன்றாடம் நடக்கும் கல்லெறி சம்பவங்களும், அதை தொடர்ந்து நடக்கும் துப்பாக்கி சூடு- உயிர்ப்பலி சம்பவங்களும் நாடு முழுவதும் ஒருவித கவலையைத் தோற்றுவித்துள்ளது. இதனால், நேற்று நடந்த காஷ்மீர் பிரச்சினை குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து நாடு முழுக்க ஒருவித எதிர்பார்ப்பு நிலவியது.
ஏதாவது ஒரு சமரசத் தீர்வு எட்டப்பட்டு, அதன்மூலம் வன்முறை சம்பவங்கள் கொஞ்சமாவது குறையாதா என்ற ஏக்கத்தினாலும், எதிபார்ப்பினாலும் விளைந்த எதிர்பார்ப்பு அது. ஆனால், இதுபோன்ற நப்பாசை எல்லாம் உங்களுக்கு வரலாமா என்று எக்காளத்துடன் அரசியல்வாதிகள் சிரிப்பதாகத்தான் இந்தக் கூட்டமும் நடந்து முடிந்தது.
வழக்கம் போல, காஷ்மீரில் நடக்கும் உயிரிழப்புகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்டதன் மூலம் தனது பிரதமர் பதவிக்கான கடமையை நிறைவேற்றினார், மன்மோகன்சிங். மாநிலமே பற்றி எரியும்போதும், வார இறுதி நாட்களை தனது குடும்பத்தாருடன் செலவிட டெல்லிக்கு வந்துவிடும் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவால் இந்தக் கூட்டத்துக்கு வரமுடியவில்லை.
சாப்பிட்ட பிஸ்கட், குடித்த காபிக்கு வஞ்சகம் செய்யாமல் தங்கள் பங்குக்கு ஏதேதோ பேசினர், அனைத்துக்கட்சித் தலைவர்கள். கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் “எல்லாவற்றிற்கும் காரணம் ஓமர் தான்” என்று சாடினார், காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் மெஹபூபா. அதே சமயம் எதிர்காலத்தில் காங்கிரசுடனான கூட்டணி வாய்ப்பையும் கருத்தில் கொண்டு, காங்கிரசை விமர்சிப்பதை மட்டும் மெஹபூபா கவனமாகத் தவிர்த்து விட்டார்.
கூட்ட முடிவில், அனைத்துக்கட்சி குழுவினரை காஷ்மீருக்கு நேரடியாக அனுப்பி நிலவரத்தை அறிந்து வர முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர்கள்தான். சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீர் பிரச்சினையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்தவர்கள்தான். இப்போது ஆரம்பித்த பிரச்சினையின் பின்னணியும் என்ன என்று தெரியாதவர்கள் அல்ல. அப்படி இருந்தும் ஒரு குழு அமைத்து, அந்த குழு அங்கு சென்று நேரடியாக நிலவரத்தைக் கண்டு வரவேண்டும் என்று இவர்கள் தீர்மானம் செய்து இருப்பது மீண்டும் மீண்டும் மக்களை, குறிப்பாக காஷ்மீர் மக்களை ஏமாற்றும் செயலே அன்றி வேறு எதுவும் இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் குழு பிரச்சினை உக்கிரமாக இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லாமல், சற்றே அமைதியுடன் இருக்கும் ஜம்மு பகுதிக்கு தான் செல்லப் போகிறதாம். இதைவிட கேலிக்கூத்தான விஷயம் வேறு இருக்க முடியாது.
உளவுத்துறையினரும், அரசு எந்திரங்களும், காஷ்மீர் கட்சித் தலைவர்களும், அறிஞர்களும் இந்தப் பிரச்சினை குறித்து தர முடியாத விஷயங்களையும், ஆலோசனைகளையும் இந்தக்குழு தந்து விடும் என்ற நம்பிக்கை காஷ்மீர் மக்களுக்கு எப்படி ஏற்படும்? ஏதாவது ஒரு சமரசத் திட்டம் மத்திய அரசால் அளிக்கப்படும் என்று நப்பாசையுடன் காத்திருந்த மக்களுக்கு மிகப்பெரிய பட்டை நாமம் அல்லவா போடப்பட்டுள்ளது?
எந்தப் பிரச்சினை என்றாலும் முடிவு எடுக்காமல் இழுத்தடிப்பது ராஜதந்திரம் என்று ஏமாற்றும் வேலையை இன்னும் எத்தனை நாள்தான் மன்மோகன்சிங் மேற்கொள்வார்?
“நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறனும் இன்றி வஞ்சகம் செய்து வாழும் இந்த வாய்ச்சொல் வீரர்கள்” திருத்தப்படுவார்களா?

அமைச்சரவையா...? பொம்மலாட்டமா...?

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்திய கருப்பு பணத்தின் மதிப்பு ஆறரை லட்சம் கோடி ரூபாய். சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியாகி உள்ள தகவல் இது. அதே சமயம், இந்தியாவின் பட்ஜெட் பற்றாக்குறை மூன்றரை லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சரிக்கட்ட உலக வங்கி மற்றும் உள்ளூர் வங்கிகளிடம் கடன் வாங்குவதும், அந்த கடன் சுமை ஒவ்வொரு இந்தியனின் முதுகில் ஏற்றப்படுவதும் எல்லோரும் அறிந்த வாடிக்கைதான்.
ஆனால், நம்மைப் போன்ற சாமான்யனுக்கு புரியாத ஒரே விஷயம் இதுதான். நமக்கு வாய்த்துள்ள பிரதமர் நேர்மையின் மறு உருவம் என்றும், பொருளாதாரத்தில் புலி என்றும் போற்றப்படுபவர். பொருளாதாரத்தில் வல்லுநர் என்கின்ற பட்சத்தில், வருடா வருடம் ஏறிக்கொண்டு இருக்கும் பற்றாக்குறையை தடுத்து நிறுத்த அவரது பொருளாதார அறிவு பயன்பட்டிருக்க வேண்டும். அல்லது, அவரது அதீத நேர்மையின் விளைவாக ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போன்ற ஊழல்களை தடுத்து நிறுத்தி இருந்தாலாவது பல்லாயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டு இருக்கும். இதில் எதுவுமே நடக்கவில்லையே...
இந்த ஆய்வில் வெளியாகி உள்ள மற்றொரு அதிர்ச்சித் தகவல் என்ன தெரியுமா? இந்தியாவில் பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கை காரணமாக, ஏழைகளுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது. இந்த நிலை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் பட்சத்தில், சமுதாயத்தில் மிகவும் கொந்தளிப்பான சூழல் உருவாகும் என்று எச்சரித்து உள்ளனர்.
ஆனால் என்ன பலன் கிட்டப் போகிறது...? அறிவுக்கூர்மை உடையவர்களாகக் கருதப்படும் பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும், அவர்களது கட்சித் தலைவியின் பொம்மலாட்ட சித்திரங்களாக இருப்பதுதான் தங்களுடைய பிறவிப் பெரும்பயன் என்று நடந்து கொள்ளும்போது எந்த ஆய்வும், எந்த எச்சரிக்கைகளும் செவிடன் காதில் ஊதப்படும் சங்காகத்தானே இருக்கும்?

Tuesday, September 14, 2010

ஸ்பெக்ட்ரம் பூதமும், இளிச்சவாய் தமிழனும்!


“ஸ்பெக்ட்ரம் புகழ்” ராஜா எத்தனை மந்திர ஜாடிகளைக் கொண்டு வந்தாலும் ஸ்பெக்ட்ரம் பூதம் அதற்குள் அடங்க மறுக்கிறது.
என்ன செய்ய? மிகவும் சக்தி வாய்ந்த- பல கோடிகளை ஏப்பம் விட்டு பெருத்திருக்கிற பூதம் ஆச்சே! சுப்ரீம் கோர்ட், ராஜாவுக்கு அனுப்பி உள்ள நோட்டீஸ் இந்த பூதத்தை மீண்டும் கிளப்பி விட்டு விட்டது.

“ஸ்பெக்ட்ரம் ஊழலை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கி ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதும், இன்னும் பெயர் தெரியாத அதிகாரிகள் மற்றும் பெயர் தெரியாத நபர்களுக்கு எதிராகத்தான் வழக்கு உள்ளது. அதுவும், சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் உள்ள எண்ணற்ற ஆதாரங்கள் கையில் இருக்கும்போதும் சி.பி.ஐ. ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று சுப்ரீம் கோர்ட் ஆச்சர்யப்பட்டுள்ளது. அனால், பொதுமக்களுக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை... ஏனெனில், ஆளும் கட்சியின் ஏவல் நாயாக செயல்பட்டுத்தானே சி.பி.ஐ.க்கு பழக்கம்...!

சுமார் எழுபது ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்த பின்னரும், அதே துறையில் அதே மந்திரி நீடிப்பது உலகில் எங்கும் நடக்காத அதிசயம்... பதவியை விட்டு நீக்குவது இருக்கட்டும், குறைந்தபட்சம் அந்தத் துறையில் இருந்தாவது மாற்றினால்தானே விசாரணை ஒழுங்காக நடக்க ஏதோ கொஞ்சநஞ்ச வாய்ப்பு உண்டு. ஆனால், நேர்மையின் மறு வடிவமாக காட்டப்படும் பிரதமர் மன்மோகன்சிங், கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு இருக்கும் மர்மம் அந்த ஸ்பெக்ட்ரம் பூதத்திற்கு மட்டும்தான் தெரியும்.

ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காரணத்துக்கெல்லாம் அவர் கைது, இவர் கைது என்று தினம்தினம் செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களின் ஒரு வருட பட்ஜெட் தொகையை ஒரே ஊழலில் சுருட்டிக்கொண்டு விட்ட ராஜாவுக்கு சுப்ரீம்கோர்ட் என்ன, சர்வதேச கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்தாலும் பதவியை விட்டு அசையப் போவதில்லை. ஏனெனில், பதவி நாற்காலிதான் இப்போது அவருக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு.

அதற்கு ஆபத்து வந்தால், வீல்சேரில் டெல்லி சென்றாவது சோனியா அம்மையாரின் காலில் விழுந்தாவது ராஜாவின் பதவியைக் காப்பாற்றி விட்டு வந்து விடுவார், செம்மொழித் தமிழர்களின் தலைவர். ஆனால், காவிரி- முல்லை பெரியாறு போன்ற மாநில பிரச்சினைகளாகட்டும் அல்லது ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை விஷயமாகட்டும் ஒரு கடுதாசி எழுதி விட்டு கைவிரித்து விடுவார்.

தமிழன் இளிச்சவாயன்தானே... எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் நல்லவனாயிற்றே... இதையும் செய்வார்கள், இதற்கு மேலும் செய்வார்கள்...!

ஒப்பிடவும் தகுதி வேண்டாமா, பிரதமரே?

தனது நடத்தை, திறமை, நேர்மை மூலமாக, பரவலாக எல்லா தரப்பு மக்களிடமும் நற்பெயர் பெற்றுள்ளவர், பிரதமர் மன்மோகன்சிங். ஆனால், சில நாட்களுக்கு முன்னர் அவர் வெளியிட்ட கருத்து ஒன்று நாட்டு மக்களை மட்டுமல்ல, அவரது கட்சியினரையே வியப்புக்கு உள்ளாக்கியது. ஆம்! “இப்போதுள்ள அமைச்சரவை ஒற்றுமை மற்றும் கட்டுக்கோப்பில் நேரு காலத்திய அமைச்சரவையை விட சிறப்பானது” என்று அவர் தெரிவித்த கருத்துதான் பலரது புருவத்தை உயர்த்தி உள்ளது.

இப்படிப்பட்ட கருத்தை அவர் வெளியிட அவரை தூண்டிய விஷயம் எது? தன்னுடைய அமைச்சரவையின் செயல்பாட்டை தானே மெச்சிக் கொள்ளும் சாதாரண உணர்வின் வெளிப்பாடுதானா? அல்லது, அதையும் தாண்டிய முக்கியமான நோக்கம் ஏதும் உள்ளதா என்பது குறித்த விவாதம் அரசியல் உயர் மட்டத்தில் பரபரப்பான விஷயமாகி விட்டது.
நோக்கம் எதுவாக இருந்தாலும் அவரது கூற்று உண்மைதானா? மிகவும் புகழ்பெற்ற நேரு மந்திரிசபையை விட இப்போது நாம் பெற்றிருக்கும் மந்திரிசபை சிறப்பானதா? கட்டுக்கோப்பானதா? என்ற வியப்பு நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒருசில மந்திரிகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் மனம் விழையத்தான் செய்கிறது.

நாம் இன்று பார்க்கும் ஒன்றுபட்ட இந்தியா, சர்தார் வல்லபாய் படேல் என்ற இரும்பு மனிதர் காட்டிய உறுதியாலும், நேர்மையாலும், சலியாத உழைப்பாலும் உருவான ஒன்று. மிகப்பெரிய அளவில் நடைபெற்றே இந்து- முஸ்லிம் கலவரத்தின் பாதிப்பினால் அதிர்ச்சியால் உறைந்து போயிருந்த மக்களை மீண்டும் ஒன்றிணைக்கும் அரிய செயலை அனாயசமாக செய்து காட்டியவர் படேல்! இன்றோ, காஷ்மீரில் நடக்கும் கல்லெறி சம்பவங்களையும், மாவோயிஸ்டுகளின் தனி ராஜ்யத்தையும் எப்படி அடக்குவது என்று தெரியாமல் உள்துறை அமைச்சகம் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதைப் பார்க்கும்போது, படேல் குறித்த ஏக்கம் நம் மனதில் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த காலத்துடன், காவிரி நதிநீர் பிரச்சினை போன்ற மாநிலங்கள் இடையே எழும் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாமலும், நீதித்துறை மீதே படியும் களங்கங்களை துடைக்க வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இன்றைய சட்ட அமைச்சகத்தை ஒப்பிட்டு பெருமை கொள்வது?

விடுதலை பெற்ற உடன் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் சில காலம் அலங்கரிக்கப்பட்டு, பின்னர் பசுமை புரட்சி போன்ற திட்டங்களைக் கொண்டு வந்து இந்திய வேளாண்மைத் துறைக்கு பொற்காலத்தை உருவாக்கிய சி. சுப்பிரமணியம் போன்ற மாமேதைகள் வகித்த வேளாண் துறை அமைச்சகம் இன்று செயல்படும் விதத்தை வைத்து நம்மால் சந்தோஷப்பட முடியுமா? உணவு தானியங்களைக் கூட சேமித்து வைக்க வக்கு இல்லாத இன்றைய வேளாண் அமைச்சகம் பெருமைக்குரியதா?

அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பதவியைத் துறந்த எளிமைக்கு உதாரணமாக விளங்கிய லால் பகதூர் சாஸ்திரி அவர்களுடன், எவ்வளவோ விபத்துக்கள் நடந்த பின்னரும் ரயில்வே அமைச்சக அலுவலகம் பக்கம் கூட எட்டிப் பார்க்காமல், மந்திரி பதவியை தன்னுடைய மாநில அரசியல் லாபத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் இன்றைய ரயில்வே மந்திரியை பார்த்து எப்படி பெருமை கொள்வது?

விடுதலை பெற்ற ஆரம்பக்கட்டம் என்பதால் போதுமான ராணுவ பலம் இல்லாத நிலையிலும், சீனா- பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அச்சுறுத்தல்களை எல்லாம் சமாளித்த கிருஷ்ணமேனன், ஒய்.பி. சவான் போன்றவர்களுடன், அண்டை நாடுகளின் சேட்டைகளை எல்லாம் எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் பலவீனமாக தோற்றம் அளிக்கும் இன்றைய பாதுகாப்பு அமைச்சகத்தை எப்படி உயர்ந்தது என்று ஏற்றுக் கொள்வது?

வெளியுறவு அமைச்சகத்தையும் தானே திறம்பட நிர்வகித்த பண்டித நேருவின் பஞ்சசீல கொள்கை உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உச்சாணிக்கு கொண்டு சென்றதே... அதுவன்றோ சிறப்பான செயல்பாடு! மாறாக, கூப்பிடும் தூரத்தில் தமிழினமே கொத்து கொத்தாக அழித்தொழிக்கப்பட்டபோது கூட கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்திய இன்றைய வெளியுறவு அமைச்சகத்தைப் பார்த்து எப்படி நம்மால் மகிழ முடியும்?

எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையின் உறைவிடமாகத் திகழ்ந்த அந்த மகான்களையும், தேசத்தின் மீது அவர்கள் காட்டிய அக்கறையையும், உணவு- மருந்து- விளையாட்டு என்று அனைத்து துறைகளிலும் ஊழல் பூதம் தலைவிரித்து ஆடுவதையும், தங்களின் குடும்ப நலன் மட்டுமே பிராதானம் என்று மாறிவிட்ட நிலைமையையும் ஒப்பிடுவதே கூட, அந்த தன்னலமறியா தியாகிகளை நாம் கொச்சைப்படுத்துவதாகத்தான் அமையும் என்பது சாதாரண மனிதர்களுக்குக் கூட தெரியும்! பிரதமருக்கு தெரியாமல் போனதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஆச்சர்யம்! அதிலும், ஒற்றுமையான அமைச்சரவை என்று கூறியதின் மூலம், நகைச்சுவை உணர்வில் தான் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை கூற விரும்பி உள்ளார் என்றே தோன்றுகிறது.

Monday, September 13, 2010

ரௌத்திரம் பழகு......

கம்சன் என்று ஒரு அசுரனை அழிக்க கடவுளுக்கே ரௌத்திரம் தேவை பட்டது என்றால் இன்றைய  சமூகமே அசுரர்களாக இருக்கும் போது கண்டிப்பாக ரௌத்திரம் பலகித்தனே ஆக  வேண்டும்....
ஆகவே
ரௌத்திரம் பழகு......