Wednesday, September 15, 2010

அமைச்சரவையா...? பொம்மலாட்டமா...?

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்திய கருப்பு பணத்தின் மதிப்பு ஆறரை லட்சம் கோடி ரூபாய். சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியாகி உள்ள தகவல் இது. அதே சமயம், இந்தியாவின் பட்ஜெட் பற்றாக்குறை மூன்றரை லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சரிக்கட்ட உலக வங்கி மற்றும் உள்ளூர் வங்கிகளிடம் கடன் வாங்குவதும், அந்த கடன் சுமை ஒவ்வொரு இந்தியனின் முதுகில் ஏற்றப்படுவதும் எல்லோரும் அறிந்த வாடிக்கைதான்.
ஆனால், நம்மைப் போன்ற சாமான்யனுக்கு புரியாத ஒரே விஷயம் இதுதான். நமக்கு வாய்த்துள்ள பிரதமர் நேர்மையின் மறு உருவம் என்றும், பொருளாதாரத்தில் புலி என்றும் போற்றப்படுபவர். பொருளாதாரத்தில் வல்லுநர் என்கின்ற பட்சத்தில், வருடா வருடம் ஏறிக்கொண்டு இருக்கும் பற்றாக்குறையை தடுத்து நிறுத்த அவரது பொருளாதார அறிவு பயன்பட்டிருக்க வேண்டும். அல்லது, அவரது அதீத நேர்மையின் விளைவாக ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போன்ற ஊழல்களை தடுத்து நிறுத்தி இருந்தாலாவது பல்லாயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டு இருக்கும். இதில் எதுவுமே நடக்கவில்லையே...
இந்த ஆய்வில் வெளியாகி உள்ள மற்றொரு அதிர்ச்சித் தகவல் என்ன தெரியுமா? இந்தியாவில் பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கை காரணமாக, ஏழைகளுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது. இந்த நிலை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் பட்சத்தில், சமுதாயத்தில் மிகவும் கொந்தளிப்பான சூழல் உருவாகும் என்று எச்சரித்து உள்ளனர்.
ஆனால் என்ன பலன் கிட்டப் போகிறது...? அறிவுக்கூர்மை உடையவர்களாகக் கருதப்படும் பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும், அவர்களது கட்சித் தலைவியின் பொம்மலாட்ட சித்திரங்களாக இருப்பதுதான் தங்களுடைய பிறவிப் பெரும்பயன் என்று நடந்து கொள்ளும்போது எந்த ஆய்வும், எந்த எச்சரிக்கைகளும் செவிடன் காதில் ஊதப்படும் சங்காகத்தானே இருக்கும்?

2 comments:

  1. இந்தியாவின் கருப்பு பணம் மட்டும் சுமார் 67,ooo லட்சம் கோடி
    ஆதாரம்: http://wiki.answers.com/Q/Total_black_money_in_India

    ReplyDelete