Thursday, September 23, 2010

“இலவச” அரசுக்கு, உயிரும் இலவசம்தானோ ?

தமிழகத்தில் வெகு வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் தடுப்பு ஊசி கட்டணத்தை மேலும் 25 ரூபாய் ஏற்றி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த ஊசியை இலவசமாக போட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட வழக்கில், பத்து லட்சம் ஏழைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிதி இலாகாவின் பரிசீலனையில் இருப்பதால் அரசு ஆணைக்காக காத்திருப்பதாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அது என்னமோ தெரியவில்லை, மக்களை பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளில் உடனடியாக முடிவெடுக்க மட்டும் ஆட்சியாளர்களுக்கு மனமே வரமாட்டேங்குது... சினிமாக்காரர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் விஷயத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளில் காட்டிய வேகத்தை, ஏழைகளின் உயிரைக் காக்கும் விஷயத்தில் காட்ட ஏனோ மனம் வரமாட்டேங்குது. அதிகாரபூரவமாக மட்டும் இதுவரை இந்த விஷக்காய்ச்சலுக்கு பதினோரு பேர் பலியாகி உள்ளனர்.

இந்தத் தடுப்போசியின் விலை 200 ரூபாயில் இருந்து இப்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு தரப்பில் கூறப்படுவது போல பத்து லட்சம் ஏழை மக்களுக்கு இலவசமாக ஊசி போட 22.5 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும். இதற்கு ஒப்புதல் கொடுக்க தீவிரமாக பரிசீலனை செய்யும் நிதி அமைச்சகம், அரைகுறையாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தின் மேற்கூரை செட் போட மட்டுமே இரண்டு கோடி ரூபாய் செலவழிக்க உடனடியாக ஒப்புதல் கொடுக்க முடிந்ததே, அது எப்படி?

ஒரு மிக முக்கியமான கட்டிடத்தின் மேற்கூரையை சினிமா செட் போடுவர்களை வைத்து செட் போட்டு திறப்புவிழா நடத்தப்பட்ட கேவலத்தையும் தமிழகம் பார்த்து விட்டது. அதற்கு இரண்டு கோடியை வீனாக்கத் துணிந்த நிதித் துறையால், மக்களின் உயிர் பிரச்சினைக்கு பணம் ஒதுக்க முடியவில்லையா?

அரசு சொல்லும் “ஏழை” மக்களின் ஒரு நாள் கூலியே 225 ரூபாய் இருக்காதே, பிறகு எப்படி அவர்களால், தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்?

கொலைகாரர்களால் வெட்டப்பட்டு, தன் கண்ணெதிரே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் உயிரைக் காப்பாற்ற முனையாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு, அவர் கண்ணில் தென்படாத ஏழைகள் உயிரா பெரிதாக தெரிந்துவிடப் போகிறது?

இலவசங்களினாலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அரசுக்கு ஏழைகளின் உயிரும் இலவசக் கணக்குதானே!

No comments:

Post a Comment