Wednesday, September 15, 2010

திண்ணைப்பேச்சை விஞ்சும் அனைத்துக்கட்சி கூட்டம்!


எல்லா கிராமங்களிலும் வெட்டி பேச்சு பேசுவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கும். ஏதாவது ஒரு திண்ணையில் கூடி உள்ளூர் முதல் உலக விவாகரம் வரை இங்கு காரசாரமாக விவாதிக்கப்படும். இந்த விவாதங்கள் எந்த முடிவுகளையும் எட்டுவதற்கு அல்ல... மாறாக, அன்றைய பொழுதைக் கழிக்கும் வழி இது!
இப்போதெல்லாம் அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டங்களும் திண்ணைப் பேச்சு பேசும் கூட்டங்களாகவே மாறி விட்டன. சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினை ஆகட்டும் அல்லது கொந்தளித்துக் கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சினை ஆகட்டும் சம்பிரதாய கூட்டங்களாகவே மாறி விட்டன.
இயற்கை அழகு கொஞ்சும் காஷ்மீர் பள்ளத்தாக்கில், அன்றாடம் நடக்கும் கல்லெறி சம்பவங்களும், அதை தொடர்ந்து நடக்கும் துப்பாக்கி சூடு- உயிர்ப்பலி சம்பவங்களும் நாடு முழுவதும் ஒருவித கவலையைத் தோற்றுவித்துள்ளது. இதனால், நேற்று நடந்த காஷ்மீர் பிரச்சினை குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து நாடு முழுக்க ஒருவித எதிர்பார்ப்பு நிலவியது.
ஏதாவது ஒரு சமரசத் தீர்வு எட்டப்பட்டு, அதன்மூலம் வன்முறை சம்பவங்கள் கொஞ்சமாவது குறையாதா என்ற ஏக்கத்தினாலும், எதிபார்ப்பினாலும் விளைந்த எதிர்பார்ப்பு அது. ஆனால், இதுபோன்ற நப்பாசை எல்லாம் உங்களுக்கு வரலாமா என்று எக்காளத்துடன் அரசியல்வாதிகள் சிரிப்பதாகத்தான் இந்தக் கூட்டமும் நடந்து முடிந்தது.
வழக்கம் போல, காஷ்மீரில் நடக்கும் உயிரிழப்புகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்டதன் மூலம் தனது பிரதமர் பதவிக்கான கடமையை நிறைவேற்றினார், மன்மோகன்சிங். மாநிலமே பற்றி எரியும்போதும், வார இறுதி நாட்களை தனது குடும்பத்தாருடன் செலவிட டெல்லிக்கு வந்துவிடும் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவால் இந்தக் கூட்டத்துக்கு வரமுடியவில்லை.
சாப்பிட்ட பிஸ்கட், குடித்த காபிக்கு வஞ்சகம் செய்யாமல் தங்கள் பங்குக்கு ஏதேதோ பேசினர், அனைத்துக்கட்சித் தலைவர்கள். கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் “எல்லாவற்றிற்கும் காரணம் ஓமர் தான்” என்று சாடினார், காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் மெஹபூபா. அதே சமயம் எதிர்காலத்தில் காங்கிரசுடனான கூட்டணி வாய்ப்பையும் கருத்தில் கொண்டு, காங்கிரசை விமர்சிப்பதை மட்டும் மெஹபூபா கவனமாகத் தவிர்த்து விட்டார்.
கூட்ட முடிவில், அனைத்துக்கட்சி குழுவினரை காஷ்மீருக்கு நேரடியாக அனுப்பி நிலவரத்தை அறிந்து வர முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர்கள்தான். சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீர் பிரச்சினையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்தவர்கள்தான். இப்போது ஆரம்பித்த பிரச்சினையின் பின்னணியும் என்ன என்று தெரியாதவர்கள் அல்ல. அப்படி இருந்தும் ஒரு குழு அமைத்து, அந்த குழு அங்கு சென்று நேரடியாக நிலவரத்தைக் கண்டு வரவேண்டும் என்று இவர்கள் தீர்மானம் செய்து இருப்பது மீண்டும் மீண்டும் மக்களை, குறிப்பாக காஷ்மீர் மக்களை ஏமாற்றும் செயலே அன்றி வேறு எதுவும் இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் குழு பிரச்சினை உக்கிரமாக இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லாமல், சற்றே அமைதியுடன் இருக்கும் ஜம்மு பகுதிக்கு தான் செல்லப் போகிறதாம். இதைவிட கேலிக்கூத்தான விஷயம் வேறு இருக்க முடியாது.
உளவுத்துறையினரும், அரசு எந்திரங்களும், காஷ்மீர் கட்சித் தலைவர்களும், அறிஞர்களும் இந்தப் பிரச்சினை குறித்து தர முடியாத விஷயங்களையும், ஆலோசனைகளையும் இந்தக்குழு தந்து விடும் என்ற நம்பிக்கை காஷ்மீர் மக்களுக்கு எப்படி ஏற்படும்? ஏதாவது ஒரு சமரசத் திட்டம் மத்திய அரசால் அளிக்கப்படும் என்று நப்பாசையுடன் காத்திருந்த மக்களுக்கு மிகப்பெரிய பட்டை நாமம் அல்லவா போடப்பட்டுள்ளது?
எந்தப் பிரச்சினை என்றாலும் முடிவு எடுக்காமல் இழுத்தடிப்பது ராஜதந்திரம் என்று ஏமாற்றும் வேலையை இன்னும் எத்தனை நாள்தான் மன்மோகன்சிங் மேற்கொள்வார்?
“நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறனும் இன்றி வஞ்சகம் செய்து வாழும் இந்த வாய்ச்சொல் வீரர்கள்” திருத்தப்படுவார்களா?

No comments:

Post a Comment