Thursday, October 14, 2010

யாருக்கும் வெட்கமில்லை...

இரண்டு நாட்களுக்கு முன்னர், செய்தித் தாள்களைப் புரட்டியவர்களுக்கு ஒரு வேடிக்கை- அதிர்ச்சி தென்பட்டிருக்கும். “லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலை நடைபெறுவதில்லை; இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்பதை நிர்ணயித்து விட்டால் அரசு அதிகாரிகளுக்கும் பேரம்பேச வேண்டிய அவசியம் இருக்காது; மக்களுக்கும் இந்த வேலைக்கும் இவ்வளவு லஞ்சம் என்று தெரிந்து விடும்” என்று உச்ச நீதிமன்றம் கேலியாகவும் கிண்டலாகவும் தனது வேதனையை பதிவு செய்துள்ளது செய்தியாக வந்துள்ளது.
சட்டத்தின் மாட்சிமையை நிலைநாட்டும் பொறுப்பில் உள்ள- நாட்டிலேயே உயர்ந்தபட்ச அமைப்பான உச்சநீதிமன்றம், லஞ்சம் குறித்த வழக்கில் தங்களது வேதனையையும் இயலாமையையும் இவ்வாறு வெளியிட்டுள்ளதைப் பார்க்கும் போது, இந்த தேசத்தைக் காப்பாற்ற இனி யாரால் முடியும் என்ற அவநம்பிக்கை நல்லோர் மனதில் எழுவது இயற்கையே!
சட்டத்தின் மாட்சிமையைக் காப்பாற்ற வேண்டிய- தவறு செய்தவர்களை தண்டிக்க எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டவர்களே இப்படி பேச நேரிட்டதை, ஊழலில் புழுத்து நெளியும் அரசியல்வாதிகளின் வெற்றி என்று எடுத்துக் கொள்வதா? அல்லது, இந்த நாட்டின் சாபக்கேடு என்று எடுத்துக் கொள்வதா?
சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்திய கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் 65 லட்சம் கோடி எனத் தெரிவிக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த கடனையும் அடைத்து விடுவதுடன், பல வருடங்களுக்கு இந்தியா முழுமைக்கும் பட்ஜெட் போடலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்த முறை பதவி ஏற்றவுடன் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிவிப்பு என்ன தெரியுமா? வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வருவதுதான் தனது தலையாயப் பணி என்று அறிவித்தார். ஆண்டு ஒன்று உருண்டோடி விட்டது; கொடுத்த வாக்குறுதியும் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு விட்டது.
அறுபதாயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வழக்குப் பதிவு செய்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும், விசாரணையில் துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. விசாரிக்க ஆரம்பித்தால்தானே முன்னேற்றம் ஏதும் ஏற்படும்....? இவ்வளவு பெரிய ஊழல் நடந்து இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தும் கூட பிரதமர் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர் ஏன் கவலைப்படப் போகிறார்? மக்களிடம் சலனம் ஏற்பட்டால்தானே அவர் பயப்பட வேண்டும்?
மக்கள்தான் இலவச தொலைக்காட்சிகளில் “மானாட மயிலாட”க்களையும், தொலைக்காட்சிகளுக்கே தெரிந்த சூப்பர் ஹிட் படங்களையும் பார்த்தே மூளையை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்களே...! பின்னர் ஏன், அரசியல்வாதிகளும், நீதிபதிகளும் ஊழலை ஒழிக்க ஆர்வம் காட்ட வேண்டும்?
யாருக்கும் இங்கே வெட்கம் இல்லை...!

Thursday, October 7, 2010

வாங்கும் சம்பளத்திற்கு வேலையை செய்ய எதற்கு ஆசீர்வாதம்?

“திருச்சி கலெக்டராக இருந்த சவுண்டையா, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டார். பொறுப்பு ஏற்பதற்கு முன்னர், முதல்வர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்”
சமீபத்தில் பத்திரிகையில் படத்துடன் வெளிவந்த செய்தி இது. ஒரு கலெக்டர் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்று, பொறுப்பேற்தற்கு முன்பு முதல்வரிடம் ஆசி பெற வேண்டிய அவசியம் என்ன? இந்த மாவட்டத்தில் ரொம்ப அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன்... இப்போது மாற்றலாகி போகும் மாவட்டம் ரொம்ப செழிப்பானது; அங்கு போய் நன்றாக வலமாக வாழ எனக்கு ஆசீர்வாதம் தாருங்கள் என்கிறாரா?
சமீப காலமாக இந்தப் பழக்கம் மிகவும் அதிகமாகி விட்டது. இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல்துறை பணி (ஐ.பி.எஸ்.) என்பது மிகவும் முக்கியமான பணிகள் ஆகும். எந்தவித அரசியல் கலப்பும் இன்றி, விருப்பு- வெறுப்பு இன்றி, நாட்டின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்ற வேண்டிய இவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக செயல்படுவதற்கென்றே படித்து விட்டு வந்தவர்கள் போல செயல்படுவதை வெளிப்படையாக காட்டுவதுதான் இதுபோன்ற செயல்பாடுகள்.
ஒரு அதிகாரி, ஒரு பதவியில் நியமிக்கப்படுகிறார் என்னும்போது, அது அவர்களுடைய பணி தன்மையின் ஒரு பகுதிதான். ஆட்சியாளர்களிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறார்கள் என்றாலே, அது அவர்களின் தயவில் பெற்ற பதவி என்பதும், அதன்மூலம் சட்டத்திற்கு புறம்பான ஏகப்பட்ட ஆதாயங்கள் காத்திருக்கின்றன என்பதை எல்லோருமே புரிந்து கொள்ளலாம்.
இப்போதெல்லாம், காவல் துறையில் எஸ்.பி. நிலை பதவிகளில் உள்ளவர்கள் கூட முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்கும் புகைப்படங்கள் அடிக்கடி பத்திரிகைகளில் தென்படுகின்றன.
“நான் இதுவரை இருந்த பதவி அவ்வளவு பசை உள்ள பதவி இல்லை; இப்போது நல்ல செழிப்பான வருமானம் வரும் பதவி கொடுத்து இருக்கிறீர்கள்; அதற்கு நன்றி” என்று நமக்கெல்லாம் உணர்த்த விரும்புகிறார்களா? அல்லது, “எனக்கும் முதல்வர், துணை முதல்வரிடம் நன்கு அறிமுகம் உள்ளது” என்ற தனது சக அதிகாரிகளுக்கு சேதி சொல்ல விரும்புகிறார்களா? என்னவிதமான நோக்கம் இதில் அடங்கி இருக்கிறது?
இந்தப் பழக்கம் மிகவும் கேவலமான ஒன்று; அதனால் என்னிடம் இதுபோன்ற விஷயங்களுக்கு யாரும் வரக்கூடாது என்று முதல்வராவது சொல்ல வேண்டாமா? அதுசரி, தினசரி போட்டோ எடுத்து பத்திரிகைகளில் வெளியிடுவதைத் தவிர அவருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?
நல்ல தேசம் இது....

Tuesday, October 5, 2010

விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் எதற்கு?

ஷங்கரின் கனவு படைப்பு- ரஜினியின் அசத்தல் நடிப்பு- ஐஸ்வர்யா என்ற அழகுக் குவியலின் தோற்றம்- சந்தானத்தின் நகைச்சுவை கலாட்டா- சன் பிக்சர்ஸின் பிரமாண்டத் தயாரிப்பு- இந்தியாவிலேயே இது போன்ற தயாரிப்பு வந்ததில்லை என ஏக தடபுடலுடன், பத்திரிக்கைகளின் ஒட்டுமொத்த ஜால்ரா ஓசையுடன் வெளியான எந்திரன் படத்தின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
“நீலச்சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும்” என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு எல்லா தியேட்டர்களிலும் அனைத்து காட்சிகளின் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன என்று ஜால்ரா பத்திரிகைகளின் ஆதரவுடன் அடித்த தம்பட்டத்தின் ஓசை அடங்கும் முன், அதாவது நேற்றே பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட்டுகள் தாராளமாகக் கிடைத்தன.
முதல் நாள் எப்படியாவது ஒட்டுமொத்த கூட்டத்தையும் தியேட்டருக்கு வரவழைத்து, 50 ரூபாய் டிக்கெட்டுக்கு 300 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்ற என்ற நோக்கத்தில் பட அதிபர்கள் செய்த தகிடுதத்தம் வேணுமானால் பலித்து இருக்கலாம். ஆனால், “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு” என்ற பழமொழிக்கேற்ப, எட்டு நாள் அல்ல, மூன்றாம் நாளே புளுகு மூட்டை அவிழ்ந்து விட்டதை, முதல் நாள் 300 ரூபாய் கொடுத்து பார்த்தவர்கள் எல்லாம் மனப்புழுக்கத்தொடு எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆட்சி மற்றும் அதிகாரம் கையில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, தர்ம நியாயங்களை மட்டும் அல்ல, சட்டத்தையும் இந்தப் படத்திற்காக இஷ்டம் போல வளைத்து, எப்படி எல்லாம் ஒரே நாளில் பணத்தை சுருட்ட முடியுமோ, அப்படி எல்லாம் சுருட்டி உள்ளனர்.
நூறு கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு, “எந்திரன்” என்ற தமிழ் பெயர் (....?) வைத்து விட்டதால் முழு வரிவிலக்கு; தியேட்டரில் இஷ்டம் போல டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யக்கூடாது என்ற விதியை மீறி, எக்கச்சக்கமாக கட்டண உயர்வு... அல்ல, அல்ல.... கட்டணக் கொள்ளை நடைபெற்றதை சட்டத்தைக் கையில் வைத்து இருப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை; (சங்கம் போன்ற ஒரு சில நியாயமான தியேட்டர்கள், வழக்கமான விலையிலேயே டிக்கெட் விற்றனர்).
தியேட்டர்களில் வழக்கமாக நான்கு காட்சிகள் திரையிட மட்டுமே அனுமதி உண்டு. பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி கொடுப்பதும் உண்டு. ஆனால், இந்தப் படத்தை எட்டு காட்சிகள் திரையிட்டனர். முதல் நாள் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை (வெறியை) காசாக்கி விடவேண்டும் என்ற களவாணித்தனத்திற்கு அரசு எந்திரங்களும் துணை போயின.
தனது “ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு” கொடுத்ததாக பாடி ஆடிய ரஜினிக்கு அதுவும் போதவில்லை போலிருக்கு. “ஒரு துளி வியர்வைக்கு ஒரு வைரக்கல்” வேண்டும் போல... தனது ரசிகர்களிடம் கொள்ளை அடிக்க ரஜினியும் துணை போயிருக்கிறார் என்பதுதான் உண்மை.
சரி, இவ்வளவு கொள்ளைதான் அடிக்கப் போகிறோமே, நல்ல படத்தையாவது கொடுப்போம் என்று நினைத்தார்களா...? அட... குறைந்தபட்சம், ரஜினி ரசிகர்களைத் திருப்திபடுத்தும் வகையில் ரஜினி ஸ்டைல், மேனரிஸம் போன்றவற்றையாவது திகட்டத் திகட்ட கொடுத்திருக்கலாம். அதுவும் கிடைக்காமல், ரஜினி ரசிகர்கள் ஷங்கரை கேட்ட வார்த்தையால் திட்டுவதை தியேட்டரில் காண முடிகிறது.
ஒருசிலர், சிறுவர்கள் பார்த்து ரசிக்கலாம் என்று படத்தைப் பற்றி ஒரு கருத்து சொல்கின்றனர். சிறுவர்கள் பார்த்து ரசிக்கத்தான் எண்ணற்ற தரமான ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் உள்ளனவே.... இதுபோன்ற அரைவேக்காட்டுப் படங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இன்றைய சிறுவர்கள் இல்லை என்பதே யதார்த்தம்.
ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் சமுதாய அவலங்களை அற்புதமாக சாடி இருப்பதுடன், அழகான காதலையும் சொல்லி இருப்பார். ஆனால், இந்தப் படத்தில் ஷங்கரின் கற்பனை முற்றிலும் வறண்டு விட்டது என்பதற்கு, காதல் காட்சிகளைக் கூட ரசிக்கும்படியாக அவரால் எடுக்க முடியாமல் திணறியதில் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது.
சினிமா என்பது லாஜிக்குக்கு எல்லாம் அப்பாற்பட்டதுதான்... ஆனால், அது முட்டாள்தனமானதாக இருக்கக் கூடாது. இதற்கு ஏகப்பட்ட காட்சிகளை உதாரணமாக சொல்லலாம். சார்ஜ் முழுவதுமாக போன ரோபோ, ஐஸ்வர்யாவின் குரலைக் கேட்டதும் தனக்குத் தானே சார்ஜ் பண்ணிக்கொண்டு, ரயில்வே ட்ராக்கில் ஸ்கேட்டிங் செய்தபடி வருவதும் (ஏன் பறந்து வரவில்லை என்பது ஷங்கருக்கு மட்டுமே தெரியும்), துண்டு துண்டாக வெட்டப்பட்டு குப்பைமேட்டில் வீசப்பட்ட பின்னர் தானாகவே ஒட்டிக்கொண்டு காரில் ஏறி படுத்துக் கொள்வதும், காமடி என்ற பெயரில் கொசுக்களுடன் பேசுவதும்... இது ரோபோவா இல்லை, விட்டலாச்சார்யா படத்தில் வரும் மாயாஜால குட்டிச்சாத்தானா?
தமிழில் டப்பிங் செய்யப்பட்ட அவதார் போன்ற ஹாலிவுட் படங்களை கண்டுகளித்து விட்ட பிறகு, கிராபிக்ஸ் என்ற பெயரில் குழந்தைத்தனமான காட்சிகளுக்காக பணத்தை இறைத்து இருப்பது, ஷங்கரின் தன்னம்பிக்கை குறைவையே காட்டுகிறது. நல்ல படைப்பாளி என்பவன், தனது கிரியேட்டிவிட்டி மேல் அபார நம்பிக்கை கொண்டிருப்பான். அது ஷங்கரிடம் சுத்தமாகக் காணப்படவில்லை.
ரஜினி நிலைமையோ இன்னும் மோசம்... தன்னுடைய வழக்கமான பாணியை வெளிப்படுத்த முடியாமல், நல்ல கதாபாத்திரமும் கிடைக்காமல், “எதைத் தின்றால் பித்தம் தெளியும்?” என்று அல்லாடுபவராகத்தான் தெரிகிறார். விஞ்ஞானி ரஜினியின் வயதான தோற்றமும், கலாபவன்மணியிடம் பயந்து ஓடும் காட்சியும் அவரது ரசிகர்களை தர்மசங்கடத்தில் நெளியச் செய்வது என்னவோ உண்மைதான்!
கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்... “விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் எதற்கு?” என்று... எந்திரனுக்கு இது முற்றும் பொருந்தும். தனது ரசிகர்களுக்கு இனியாவது துரோகம் செய்வதை ரஜினி நிறுத்திக் கொள்ள வேண்டும்...!

Monday, October 4, 2010

கோகினூர் வைரத்துக்கு மரியாதை செய்ய குப்பைமேடுகள் வரலாமா?

அக்டோபர்-2இரண்டு மகான்களின் வாழ்க்கைப் பாதையின் முக்கியமான நாள்! காந்தி பிறந்தநாள்... காமராஜர் நினைவு நாள்... இந்திய அரசியலில் என்றென்றும் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திய பெருமகனார்கள் இவர்கள். இந்த நாளில் இவர்களைப் போற்றிக் கொண்டாட வேண்டிய நாம், குறைந்தபட்சம் அவர்களை அவமதிக்காமலாவது இருக்கலாம்...!
தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொதுவாழ்விலும் சரி, எத்தனையோ தியாகங்களை செய்து, விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்திய காந்தி மகானை விமர்சிப்பது என்பதே இன்றைக்கு ஒரு நாகரீகமாக கருதப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில், சமீபத்தில் இருபதைத் தொடும் இளைய தலைமுறையைச் சேர்ந்த சிலருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, அதில் ஒரு இளம் வாலிபர், “எனக்கு காந்தியை பிடிக்காது, அவர்தான் நாடு இப்போது இருக்கும் சீரழிந்த நிலைக்குப் பொறுப்பு” என்று அனாயசமாக குற்றம் சாட்டினார்.
எதை வைத்து சொல்கிறாய் என்று கேட்டேன். அவனுக்கு சரியான விளக்கங்கள் எதையும் சொல்ல முடியவில்லை. பிறகு ஏன் எதிர்க்கிறாய் என்று கேட்டேன்... சற்று தடுமாறி விட்டு, “இல்லங்க... பிடிக்கல...” என்றான். சரி, அவரைப் பற்றிய புத்தகங்கள் ஏதாவது படித்திருக்கிறாயா என்று கேட்டதுக்கும் “இல்லை” என்றே பதில் வந்தது. அப்படி என்றால், உனக்கு இதுபோன்ற ஒரு அபிப்ராயம் எப்படி வந்தது என்று கேட்டதுக்கும் தெளிவான பதில் இல்லை.
காந்தி இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த ஒருவன், அவரைப் பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமல், அவரை தவறாக விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? அதுவும், அவர் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டே, அவரைத் தூற்றுவது அநியாயம் அல்லவா? “காந்தியைப் பிடிக்காது; அவர் சரியான ஆள் இல்லை” என்று பேசுவதே பேஷன் என்று ஆகிவிட்டது என்றால், இது ஒருவிதமான குதர்க்கமான மனநிலையே அன்றி என்ன...?
இது இப்படி இருக்க, காமராஜர் நினைவு நாளுக்காக அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது சம்பந்தமாக பத்திரிகைகளில் ஏராளமான விளம்பரங்கள் வந்திருந்தன.
ஒரு முதல்வர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர், கர்மவீரர் காமராஜர். எளிமை என்றால் என்ன என்பதற்கு அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் மறைந்தபோது அவரிடம் இருந்த கையிருப்பு வெறும் 120 ரூபாய். இன்றைய முதல்வர்களின் குடும்ப சொத்து மதிப்புகளைக் கணக்கிட, கால்குலேட்டரில் இடம் இல்லை.
எளிமையாக மட்டுமில்லை, திறமையாகவும் ஆட்சி நடத்தி, நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழகத்தை மாற்றிக் காட்டியவர். புகழின் உச்சியில் இருக்கும்போதே, பதவியை துறந்தவர். அப்பேற்பட்ட மாமனிதரின் நினைவு தினம் இன்றைக்கு அனுசரிக்கப்பட்டது. இதற்காக கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இன்றைய முதல்வரின் துணைவி ராஜாத்தியை வரவேற்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.
எளிமையின் சின்னமாக வாழ்ந்து மறைந்த மாமனிதரின் நினைவுதின அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு, கோடிகளில் புரளும் பெண்மணியான ராஜாத்தி எந்த தகுதியின் அடிப்படையில் அழைக்கப்பட்டார்? அவர் செய்த சேவை என்ன? அல்லது தியாகம்தான் என்ன?
இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் நாடார் இன தொழிலதிபர்களால் கொடுக்கப்பட்டு இருந்தது. சுயமரியாதை சிங்கங்களாக- ஷத்ரிய புத்திரர்களாக தங்களைப் பற்றி பெருமையாக எண்ணும் இந்த இன மக்கள், இந்தப் பெண்மணியை வரவேற்று- அதுவும் கர்மவீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறார்களே, இவர்களுக்கு உணர்ச்சிகள் செத்து விட்டதா?
தான் முதல்வராக இருந்தபோது, தன்னுடைய தாயாரும் சகோதரியும் வறுமையில் உழன்று, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி ஜீவிதம் நடத்தியபோதும், அவர்களுக்காக எந்த விசேஷமான வசதிகளையும் செய்து கொடுக்காமல், நேர்மையின் வடிவாக அக்னி தேவனாக ஜொலித்தாரே, அந்த மாமனிதனுக்கு யார் வேண்டுமானாலும் அஞ்சலி செலுத்துவது போன்று நடித்து விட்டுப் போகட்டும்.... ஆனால், அந்த நிகழ்ச்சியில் ஊழல் சாக்கடையில் உருண்டு புரளும் நபர்களை முன்னிலைப்படுத்தி, கர்மவீரரை அவமதிக்க வேண்டாம்...
இனத்தின் பெயரை உபயோகித்து, தங்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்த்துக் கொள்வதொடு நிறுத்திக் கொள்ளுங்கள்; மனிதப் புனிதர் காமராஜர் புகழை மாசுபடுத்தும் செயலில் ஈடுபடவேண்டாம்!

Saturday, October 2, 2010

எந்திரன் – ஷங்கரின் சரக்கு காலி


சினிமாத்துறைக்கு உள்ள கவர்ச்சிக்கு ஈடாக வேறு எந்த துறையையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை...! உலகம் முழுவதுமே இதுதான் யதார்த்தம். எப்போதுமே, தமிழகம் இதற்கு ஒருபடி மேல்... ஆம்! தமிழர்களைப் பொருத்தவரை சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே விளங்கி வருகிறது. சினிமா நடிகர்களை தங்களின் ஆதர்ஷ நாயகனாகவும், வாழ்க்கையின் வழிகாட்டியாகவும், தங்களை வழிநடத்தும் தலைவனாகவுமே பார்க்கிறார்கள்.
ஆனால், திரைக்குப் பின்னால் இந்த நடிகர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், இவர்களது உண்மையான சொரூபங்களைக் கண்டு அதிர்ந்து போனாலும், அமைதியாகவே இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டனர். தியாகராஜ பாகவதர் காலம் தொடங்கி, எம்.ஜி.ஆர்.- சிவாஜி, ரஜினி- கமல், விஜய்- அஜித் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டேதான் செல்கிறது...
ஒரு படம் வெளியாகும்போது, அந்தப் படத்தின் உண்மையான நிறை குறைகளை, விருப்பு வெறுப்பின்றி அலசி விமர்சனம் செய்யும் தன்மை என்பது இன்றைக்கு அபூரவமாகக் கூட காணக்கூடியதாக இல்லை. பெரிய தயாரிப்பாளர், பெரிய இயக்குனர், பெரிய நடிகர் படம் என்றால், அந்தப் படத்தை பாராட்டியேத் தீர வேண்டும் என்பது கிட்டத்தட்ட எழுதப்படாத விதியாகி விட்டது. இதற்குப் பின்னால் இருப்பது “கவர்”-ஆ? இல்லை, பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வா? தெரியவில்லை...
மிகப்பெரிய விளம்பரங்களுடன் ஏக தடபுடலாக வெளியான எந்திரன் பற்றிய விமர்சனத்திலும் இதுதான் வெளிப்பட்டு உள்ளது. “ஆஹா, ஓஹோ” என்று வெற்று வார்த்தைகளால் பாராட்டித் தள்ளி இருக்கிறார்களேத் தவிர, படம் இன்ன காரணங்களினால் சிறப்பாக இருக்கிறது என்று யாரும் சொல்லவில்லை... உண்மையில் சிறப்பாக இருந்தால்தானே, பட்டியலிட முடியும்?
முதலில், இது ரஜினி படம் என்ற கோணத்தில் பார்த்தால், மிகவும் சோபையான ரஜினியை மட்டும்தான் உங்களால் பார்க்க முடியும். அவரது ஸ்டைல், மேனரிஸம் போன்ற எதையும் பார்க்க முடியாது. காலாபவன் மணியை எதிர்க்க பயந்து கொண்டு புறமுதுகிட்டு ரஜினி ஓடும் காட்சி, அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் வெறுப்பையே அள்ளித் தந்திருக்கும்...
சரி, ஷங்கர் படம் போல, ரஜினி கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் போல என்று நினைத்தால்... அந்த நினைப்புக்கும் வேட்டுதான்! ஜென்டில்மேன், இந்தியன், முதல்வனில் பார்த்த திறமைசாலி எங்கே என்றுதான் தேட வேண்டும். உலக அழகி ஐஸ்வர்யாக்கும் ரஜினிக்கும் இடையே காதல் பொங்கும் ஒரு காட்சியைக் கூட உருப்படியாக அவரால் வைக்க முடியவில்லை. பாடல் என்றாலே நூறு பேர் கூட்டத்துக்கு நடுவே ஆடும் அதே புளித்துப்போன காட்சி அமைப்புகள், ரசிகர்களை சிகரெட் பிடிக்க வெளியே அனுப்பி விடுகின்றன.
சரி, மற்ற காட்சிகளிலாவது அவரது திறமை வெளிப்படுமா என்று எதிர்பார்த்தால், அதிலும் மண்தான்! துண்டு துண்டாக வெட்டி, அறிவியல்பூர்வமாக செத்துப்போன ரோபோ குப்பைமேட்டில் வீசப்பட்ட பின்னர், தானாக மீண்டும் ஒட்டிக்கொள்வது, கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம். கார் சேஸ் என்ற பெயரில் இன்னொரு அபத்தத்தையும் அரங்கேற்றி இருக்கிறார். சினிமா எவ்வளோவோ முன்னேறிவிட்ட போதிலும், இன்னும் இதுபோன்ற கேவலமான கார் சேஸ் சீன்களை எப்படித்தான் படத்தில் வைக்க ஷங்கருக்கு மனம் வந்ததோ?
சாப்ட்வேர் படித்த சந்தானமும், கருணாசும் ரஜினிக்கு உதவியாளர்களாம்... அவர்களை வைத்து என்ன பண்ணுவதென்று ஷங்கருக்கும் தெரியவில்லை... யாருக்கும் தெரியவில்லை... பாவமாக இருக்கிறது அவர்களைப் பார்த்தால்.... பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் பெற்ற பெயர் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு கோவிந்தா! டேனி டென்சொங்கப்பாவை வில்லன் என்று அறிமுகப்படுத்தி விட்டு, அவரையும் அம்போவென்று சாகடித்து விட்டனர்.
சரி, அறிவியல் கதை என்ற விதத்தில் பார்ப்போமா என்றால்... அதுவும் முடியவில்லை... அறிவியல் என்றாலே உண்மையும் ஆதாரமும் மிக முக்கியம். ஷங்கர் படத்தில் லாஜிக் என்றாலே என்ன என்று கேட்கும் காலத்தில் உண்மையாவது... நிரூபணமாவது...?
சார்ஜ் போன பிறகு செயலிழந்து போன ரோபோ ரஜினி, “சிட்டி” என்ற ஐஸ்வர்யாவின் அபயக்குரலை கேட்டு, அருகில் இருந்த மின்சார பாக்சில் இருந்து சார்ஜ் பண்ணிக் கொண்டு, ரயில்வே ட்ராக்கில் ஸ்கேட்டிங் பண்ணி வந்து காப்பாற்றுவது, நகைச்சுவையின் உச்சக்கட்டம்! தீவிபத்தில் சிக்கிய பெண்ணை, ஆடை இல்லாத நிலையில் தூக்கி வந்ததால், அந்தப்பெண் மானம் போயிற்று என்று கதறிக்கொண்டு லாரிக்கு குறுக்கே விழுந்து செத்துப் போவதும், செய்தி சேகரிப்பாளர்கள் மைக்கை நீட்டிக்கொண்டு நிற்பது அபத்தத்தின் உச்சம்!
இறுதியில், க்ளைமேக்ஸ் சீனில் அனிமேஷன் என்ற பெயரில் வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ஏற்பட்டது... ரோபோவை எப்படி அடக்குவது என்று தெரியாமல் நாயகன் ரஜினி திணறுவதும் (ஷங்கர் திணறி இருக்கிறார்), முடித்தால் போதும் என்ற வகையில் முடித்திருப்பதும், ஷங்கரின் தடுமாற்றத்தை காண முடிகிறது.
மொத்தத்தில் ஷங்கர் சரக்கு முடிந்து விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது... ஐஸ்வர்யாவுடன் ஆட்டம் போடும் அற்ப ஆசைகளை ரஜினி விட்டொழித்து விட்டு, அமிதாப்பச்சன் வழியில் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.
நூறு கோடி ரூபாயில் எத்தனையோ நல்ல படங்களை கொடுத்திருக்கலாம்; எவ்வளவோ திறமைசாலிகளை வெளிக்கொணர்ந்து இருக்கலாம் என்ற ஆதங்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
“எந்திரன்” – சிங்காரிக்கப்பட்ட புற்றுநோய் நோயாளி.