Wednesday, September 22, 2010

அமைதியைக் குலைக்கும் அயோத்"தீ”...


அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நாளை வழங்க இருக்கும் அயோத்தி பற்றிய தீர்ப்பு குறித்த பதற்றம் இப்போதே நாடு முழுவது பற்றிக்கொண்டு விட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொட்டே இருந்து வந்த அயோத்தி பிரச்சினை, பதினெட்டு வருடங்களுக்கு முன்பு பூதாகரமாக உருவெடுத்தது. வழக்கம் போல இதை ஆரம்பித்து வைத்ததும் அரசியல்வாதிகள்தான்!
இந்துக்களின் மிக முக்கிய கடவுளாக- ஆதர்ஷ புருஷனாகக் கொண்டாடப்படும் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்று பெரும்பான்மையான இந்துக்களால் அழுத்தம் திருத்தமாக நம்பப்படுகிறது. இப்போது சர்ச்சைக்குரிய இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் ஒன்று இருந்ததாதகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து படையெடுத்த வந்த பாபர், தான் பெற்ற வெற்றியின் நினைவுச்சின்னமாக, இந்தக் கோவிலை தகர்த்து விட்டு, அந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டி விட்டார்.
பல நூறு ஆண்டுகளாக இருந்த இந்த மசூதியை அகற்றி விட்டு, மீண்டும் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் நெடுங்காலமாக இருந்து வந்தது. 1992-ம் ஆண்டு அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரை விளைவாக இந்த மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாம் நாள் மிகவும் பதட்டமான நாளாகவே கடந்து செல்கிறது.
இந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்தான வழக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்தது.... 1992-ம் ஆண்டு சம்பவத்திற்குப் பிறகு, பெரும்பாலான மக்கள் இதை மறந்துவிட்ட நிலையில், நாளை தீர்ப்பு வெளியாகப் போகிறது என்பதால் மீண்டும் நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எப்படியும் கலவரம் மூளலாம் என்ற பயம் எல்லா மாநிலத்திலும் நிலவுகிறது.
ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை அகற்றி விட்டு மசூதி கட்டிவிட்டனர் என்று இந்து அமைப்பினரும், மசூதியை எப்படி இடிக்கலாம் என்று முஸ்லிம் அமைப்பினரும் வாதிடுகின்றனர். ஆனால், இருதரப்பினருமே இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தானே என்று கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆதிகாலத்தில் “மதம் பிடித்து திரிந்த மனிதனை முறைப்படுத்த வந்ததுதான் மதம்! உலகின் எந்த மதமாக இருந்தாலும், அடிப்படையான சில கோட்பாடுகள் ஒன்றாகவே இருப்பதை நாம் காணலாம்.
இந்து மதம், யூத மதம், அதில் இருந்து உருவான கிருத்தவ மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் ஆகிய மதங்கள்தான் உலகம் முழுவதும் பிரதானமாக பின்பற்றப்படுகிறது. நமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எந்த மதமும் வன்முறையை ஆதரித்தது இல்லை.
ஆனால், மதத்தைப் பரப்பும் அல்லது காப்பாற்றும் முயற்சியில் நடைபெற்ற சிலுவைப் போர்கள், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் இன்றைக்கும் நடைபெறும் வன்முறைகள், அமைதி ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட புத்த மதம் பின்பற்றப்படும் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, வியட்நாம், மியான்மர் மற்றும் பல நாடுகளில் நடைபெற்ற வன்முறைகள் என உலகம் முழுக்க மதத்தின் பெயரால், வன்முறைகளும் கொலைகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
சரி, அயோத்திக்கு வருவோம்.... பாபர் செய்த வரலாற்று தவறைத்தான் சரி செய்கிறோம் என்று இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். சரி, வரலாற்றைத் திருத்துவது என்று முடிவு செய்துவிட்ட பிறகு, எந்த காலக்கட்ட வரலாறு வரை திருத்த வேண்டும் என்று யார் முடிவு செய்வது? தைமூர் படையெடுப்பின்போது இடிக்கப்பட்ட கோவில்களை எல்லாம் கண்டுபிடித்து மீண்டும் கட்ட முடியுமா? இதற்கு எல்லைதான் எது? எந்த ஒரு தவறையும் மற்றொரு தவறால் சரி செய்ய முடியாது.
இஸ்லாமிய மதம்தான் அந்நிய நாட்டில் இருந்து இங்கு வந்ததே தவிர, இஸ்லாமியார்களாக இன்று இருப்பவர்கள் எல்லோரும் காலம் காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வருபவர்கள்தான்... நமது சகோதரர்கள்தான்.... சாலைப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கோவில்களை அகற்றும்போதே இந்துக்கள் எவ்வளவு வருந்துகிறார்கள்...? அப்படி இருக்க மிகப்பெரிய மசூதி கண்ணெதிரே தகர்க்கப்பட்டதைக் கண்ட இஸ்லாமிய சகோதரர்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை ஒரு உண்மையான இந்துவாக என்னால் உணர முடிகிறது.
தவிர, இந்துக்கள் மிகவும் பெருமையாக சொல்லிகொள்ளும் விஷயமே சகிப்புத் தன்மையும், மன்னிக்கின்ற பாங்கையும்தான்! ராமாயணம்- மகாபாரதத்தில் எண்ணற்ற இடங்களில் இதை நம்மால் காண முடியும். மன்னிக்கும் மனம் உள்ளவனே தெய்வத்தின் நிலைக்கு உயர்கிறான் என்று காலம் காலமாக நமக்கு சொல்லித் தரப்பட்டு வந்துள்ளது.
அப்படி இருக்க, சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர், படையெடுப்பின் பொது ஒரு தனி நபர் செய்த தவறை இன்று திருத்துகிறேன் என்று கிளம்பினால், மக்களின் வாழ்க்கை முறை முழுவதுமாக மாறிவிட்ட இந்த காலக்கட்டத்தில் அது எந்தவிதமான மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இவர்கள் உணர மாட்டார்களா?
எந்த ஒரு மனிதனுக்கும் நிம்மதியான- அமைதியான- சந்தோஷமான வாழ்க்கை தான் குறிக்கோளாக இருக்க முடியும். எந்த ஒரு மதமும், மத குருவும் அதற்கான வழியைத்தான் காட்ட வேண்டும். அதை விடுத்து, ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டு, அதன்மூலம் எரியத் தொடங்கும் நெருப்பில் குளிர் காய்பவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் விட மனித உயிரும், நிம்மதியும் மிக முக்கியமான விஷயம். எனவே, தீர்ப்பு எப்படியாக இருந்தாலும், யார் எப்படி தூண்டி விட முயற்சித்தாலும் மக்கள் அமைதி காப்பது என்று முடிவெடுத்து விட்டால், இது பிரச்சினையாகவே இருக்காது.

1 comment:

  1. சாலைப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கோவில்களை அகற்றும்போதே இந்துக்கள் எவ்வளவு வருந்துகிறார்கள்...? அப்படி இருக்க மிகப்பெரிய மசூதி கண்ணெதிரே தகர்க்கப்பட்டதைக் கண்ட இஸ்லாமிய சகோதரர்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை ஒரு உண்மையான இந்துவாக என்னால் உணர முடிகிறது.

    unmayaana varigal....masoothi idikkum pugaipadam ippothu parthalum vali varugirathu

    ReplyDelete