Friday, September 17, 2010

தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் பதவி போய்விடுமா?பகுத்தறிவுவாதிகளின் பரிகாரம்!


தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் தங்கள் முக்கிய கொள்கையாக அறிவித்து இருந்தது “பகுத்தறிவு கொள்கை”யைத்தான்! “கடவுளை நம்பாதே; வழிபாடுகள் எல்லாம் மூட நம்பிக்கைகள்; மரபு வழி பழக்கவழக்கங்கள் எல்லாம் நம்மை அடிமைப்படுத்தி வைக்க செய்யப்பட சதி; ஜோதிடம்- ராசி- நட்சத்திரம் இவை எல்லாம் ஏமாற்று வேலைகள்; கோவில்களே கொள்ளையர்களின் கூடாரம்” என்பன போன்றவைதான் பகுத்தறிவின் முக்கிய அம்சங்களாக சொல்லப்பட்டன.
ஆனால், காலப்போக்கில் இவை எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. குறிப்பாக, பதவிக்கு வந்த பின்னர் அதை தக்கவைத்துக் கொள்ள பெரும்பாலான தலைவர்கள் ரகசியமாக ஜோதிடத்தையும், கோவில் வழிபாடுகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பகிரங்கமாகவே மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். மவுண்ட்ரோட்டில் உடைக்கப்பட்ட தன்னுடைய சிலையை மீண்டும் நிறுவினால், தான் பதவிக்கு வரமுடியாது என்று நம்பிய கருணாநிதி, இதுகுறித்து வீரமணியிடம் பத்திரிகைகளில் பெரிய வாதப்போரே நடத்தினார். இன்று வரை அந்த சிலை மீண்டும் நிறுவப்படவில்லை. அதேபோல், மஞ்சள் துண்டுதான் தனக்கு மிகவும் ராசி என்று அவர் கருதுவதால், பகுத்தறிவை விட மஞ்சள் துண்டை பிடித்துக் கொள்வது நலம் என்பதில் இன்று வரை உறுதியாக உள்ளார்.
ஜெயலலிதாவைப் பற்றி கேட்கவே வேண்டாம்... எல்லாவித வழிபாடுகள், யாகங்களையும் விடாமல் செய்பவர் அவர். ஸ்டாலின் மனைவி துர்காவும் சாமி வழிபாடுகளில் மிகவும் ஆர்வம் உள்ளவர். இவர்கள் எல்லாம் சிறு உதாரணங்கள் தான். இரண்டாம் கட்டத் தலைவர்கள், குட்டித் தலைவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். பெரியார், அண்ணா வழிப்படி நடப்பதாக கதை விடும் இவர்கள் பகுத்தறிவு கொள்கையை பரணுக்கு அனுப்பி நெடுங்காலம் ஆகிவிட்டது.
இவர்களின் பகுத்தறிவு கபட நாடகத்தின் அடுத்த அத்தியாயம் இப்போது அரங்கேறி உள்ளது. தமிழக அரசியல்வாதிகளிடையே நீண்ட காலமாக ஒரு அபார நம்பிக்கை நிலவுகிறது. அதாவது, தஞ்சை பெரிய கோவில் பிரதான வாயில் வழியே உள்ளே வந்த தலைவர்களுக்கு பதவி பறிபோதலோ, ஆயுள் பாதிப்போ ஏற்படும் என்று அழுத்தம் திருத்தமாக நம்புகின்றனர். எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தி, முன்னாள் ஜனாதிபதி எஸ்.டி. சர்மா போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்கின்றனர்.
தஞ்சை பெரிய கோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் ஆனதை ஒட்டி பிரமாண்ட விழா நடத்த முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளார். ஆனால், இந்த விழாவில் கலந்து கொள்ள பிராதான நுழைவு வாயில் வழியாக கருணாநிதி வந்தால், அவரது பதவிக்கோ ஆயுளுக்கோ பிரச்சினை ஏற்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
பிரதான வாயில் வழியாக வந்தால்தானே பிரச்சினை வரும்; அதனால், அருகில் உள்ள பூங்கா வழியாக ஒரு பாதையை உருவாக்கி அதன் வழியாக உள்ளே நுழையலாம் என்று ஒரு “அற்புதமான யோசனையை” சொல்லி இருக்கின்றனர். இதனால் பூங்காவில் இருந்து கோவிலில் நுழைவதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெறுகின்றன.
தொல்லியல் துறையின்கீழ் பெரிய கோவில் உள்ளதால், அங்கு சிறிய கல்லை நகர்த்துவது என்றால் கூட அவர்களின் அனுமதி தேவை. ஆனால், இந்தப் பணிக்காக எந்த அனுமதியும் பெறவில்லை என்றே கூறப்படுகிறது.
பகுத்தறிவு பற்றி வாய் கிழிய பேசும் இவர்கள், தங்கள் பதவி- தங்கள் ஆயுள் என்று வரும்போது மட்டும் எல்லா பரிகாரங்கள்- நாள், நட்சத்திரம் எல்லாவற்றையும் பின்பற்றத் தொடங்கி விடுகின்றனர். அதுசரி, ஊருக்கு மட்டும் தானே, உபதேசம்!

No comments:

Post a Comment