Tuesday, September 14, 2010

ஒப்பிடவும் தகுதி வேண்டாமா, பிரதமரே?

தனது நடத்தை, திறமை, நேர்மை மூலமாக, பரவலாக எல்லா தரப்பு மக்களிடமும் நற்பெயர் பெற்றுள்ளவர், பிரதமர் மன்மோகன்சிங். ஆனால், சில நாட்களுக்கு முன்னர் அவர் வெளியிட்ட கருத்து ஒன்று நாட்டு மக்களை மட்டுமல்ல, அவரது கட்சியினரையே வியப்புக்கு உள்ளாக்கியது. ஆம்! “இப்போதுள்ள அமைச்சரவை ஒற்றுமை மற்றும் கட்டுக்கோப்பில் நேரு காலத்திய அமைச்சரவையை விட சிறப்பானது” என்று அவர் தெரிவித்த கருத்துதான் பலரது புருவத்தை உயர்த்தி உள்ளது.

இப்படிப்பட்ட கருத்தை அவர் வெளியிட அவரை தூண்டிய விஷயம் எது? தன்னுடைய அமைச்சரவையின் செயல்பாட்டை தானே மெச்சிக் கொள்ளும் சாதாரண உணர்வின் வெளிப்பாடுதானா? அல்லது, அதையும் தாண்டிய முக்கியமான நோக்கம் ஏதும் உள்ளதா என்பது குறித்த விவாதம் அரசியல் உயர் மட்டத்தில் பரபரப்பான விஷயமாகி விட்டது.
நோக்கம் எதுவாக இருந்தாலும் அவரது கூற்று உண்மைதானா? மிகவும் புகழ்பெற்ற நேரு மந்திரிசபையை விட இப்போது நாம் பெற்றிருக்கும் மந்திரிசபை சிறப்பானதா? கட்டுக்கோப்பானதா? என்ற வியப்பு நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒருசில மந்திரிகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் மனம் விழையத்தான் செய்கிறது.

நாம் இன்று பார்க்கும் ஒன்றுபட்ட இந்தியா, சர்தார் வல்லபாய் படேல் என்ற இரும்பு மனிதர் காட்டிய உறுதியாலும், நேர்மையாலும், சலியாத உழைப்பாலும் உருவான ஒன்று. மிகப்பெரிய அளவில் நடைபெற்றே இந்து- முஸ்லிம் கலவரத்தின் பாதிப்பினால் அதிர்ச்சியால் உறைந்து போயிருந்த மக்களை மீண்டும் ஒன்றிணைக்கும் அரிய செயலை அனாயசமாக செய்து காட்டியவர் படேல்! இன்றோ, காஷ்மீரில் நடக்கும் கல்லெறி சம்பவங்களையும், மாவோயிஸ்டுகளின் தனி ராஜ்யத்தையும் எப்படி அடக்குவது என்று தெரியாமல் உள்துறை அமைச்சகம் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதைப் பார்க்கும்போது, படேல் குறித்த ஏக்கம் நம் மனதில் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த காலத்துடன், காவிரி நதிநீர் பிரச்சினை போன்ற மாநிலங்கள் இடையே எழும் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாமலும், நீதித்துறை மீதே படியும் களங்கங்களை துடைக்க வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இன்றைய சட்ட அமைச்சகத்தை ஒப்பிட்டு பெருமை கொள்வது?

விடுதலை பெற்ற உடன் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் சில காலம் அலங்கரிக்கப்பட்டு, பின்னர் பசுமை புரட்சி போன்ற திட்டங்களைக் கொண்டு வந்து இந்திய வேளாண்மைத் துறைக்கு பொற்காலத்தை உருவாக்கிய சி. சுப்பிரமணியம் போன்ற மாமேதைகள் வகித்த வேளாண் துறை அமைச்சகம் இன்று செயல்படும் விதத்தை வைத்து நம்மால் சந்தோஷப்பட முடியுமா? உணவு தானியங்களைக் கூட சேமித்து வைக்க வக்கு இல்லாத இன்றைய வேளாண் அமைச்சகம் பெருமைக்குரியதா?

அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பதவியைத் துறந்த எளிமைக்கு உதாரணமாக விளங்கிய லால் பகதூர் சாஸ்திரி அவர்களுடன், எவ்வளவோ விபத்துக்கள் நடந்த பின்னரும் ரயில்வே அமைச்சக அலுவலகம் பக்கம் கூட எட்டிப் பார்க்காமல், மந்திரி பதவியை தன்னுடைய மாநில அரசியல் லாபத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் இன்றைய ரயில்வே மந்திரியை பார்த்து எப்படி பெருமை கொள்வது?

விடுதலை பெற்ற ஆரம்பக்கட்டம் என்பதால் போதுமான ராணுவ பலம் இல்லாத நிலையிலும், சீனா- பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அச்சுறுத்தல்களை எல்லாம் சமாளித்த கிருஷ்ணமேனன், ஒய்.பி. சவான் போன்றவர்களுடன், அண்டை நாடுகளின் சேட்டைகளை எல்லாம் எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் பலவீனமாக தோற்றம் அளிக்கும் இன்றைய பாதுகாப்பு அமைச்சகத்தை எப்படி உயர்ந்தது என்று ஏற்றுக் கொள்வது?

வெளியுறவு அமைச்சகத்தையும் தானே திறம்பட நிர்வகித்த பண்டித நேருவின் பஞ்சசீல கொள்கை உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உச்சாணிக்கு கொண்டு சென்றதே... அதுவன்றோ சிறப்பான செயல்பாடு! மாறாக, கூப்பிடும் தூரத்தில் தமிழினமே கொத்து கொத்தாக அழித்தொழிக்கப்பட்டபோது கூட கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்திய இன்றைய வெளியுறவு அமைச்சகத்தைப் பார்த்து எப்படி நம்மால் மகிழ முடியும்?

எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையின் உறைவிடமாகத் திகழ்ந்த அந்த மகான்களையும், தேசத்தின் மீது அவர்கள் காட்டிய அக்கறையையும், உணவு- மருந்து- விளையாட்டு என்று அனைத்து துறைகளிலும் ஊழல் பூதம் தலைவிரித்து ஆடுவதையும், தங்களின் குடும்ப நலன் மட்டுமே பிராதானம் என்று மாறிவிட்ட நிலைமையையும் ஒப்பிடுவதே கூட, அந்த தன்னலமறியா தியாகிகளை நாம் கொச்சைப்படுத்துவதாகத்தான் அமையும் என்பது சாதாரண மனிதர்களுக்குக் கூட தெரியும்! பிரதமருக்கு தெரியாமல் போனதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஆச்சர்யம்! அதிலும், ஒற்றுமையான அமைச்சரவை என்று கூறியதின் மூலம், நகைச்சுவை உணர்வில் தான் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை கூற விரும்பி உள்ளார் என்றே தோன்றுகிறது.

1 comment:

  1. நீங்க சர்தார் ஜொக்கெல்லாம் படிச்சதே இல்லப்போல.. பாவம் நீங்க ஒரு சர்தார் ஜொக்குக்கு இப்படி ரியாக்ட் பண்ணுறீங்க...?

    ReplyDelete