Tuesday, September 21, 2010

இடிந்து விழுந்தது மேம்பாலம் அல்ல...இந்திய மானம்....

“காமன்வெல்த் போட்டிகள் நடக்கும் இடத்துக்கு அருகில் கட்டப்பட்ட மேம்பாலம் நேற்று இடிந்து விழுந்து 27 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதில் நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது”
ஏற்கனவே இடிந்து விழுந்து கொண்டிருந்த இந்தியாவின் மானம் இந்த சம்பவம் மூலம் நேற்று மேலும் பொடிப்பொடியாக உதிர்ந்து போனது. இடிந்து விழுந்த பாலம் வழியாகத்தான் தினமும் விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்குள் செல்ல வேண்டும். போட்டி தொடங்கிய பின்னர் இந்த பாலம் இடிந்து விழுந்து வெளிநாட்டு வீரர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தால், இந்தியா என்ன பதில் சொல்லி இருக்கும்? இப்போது பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள்தானே, யாருக்கு என்ன கவலை? டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், “இது சாதாரண மக்கள் நடக்கும் மேம்பாலாம்தான்” என்று அசட்டையாகத்தான் சொல்லி இருக்கிறார்.
போட்டி தொடங்கும் நேரம் நெருங்கி விட்ட நிலையில், பாலம் மட்டும் இடிந்து விழவில்லை, வீரர்கள் தங்கும் வீடுகள் லட்சணம் பற்றிய தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியர்களையும் தலைகுனிய வைத்துள்ளது.
வீரர்கள் படுக்க வேண்டிய படுக்கைகளில் தெரு நாய்கள் படுத்து இருந்த காட்சிகளும், திறந்தவெளி மைதானங்களில் காமன்வெல்த் அமைப்பின் ஊழியர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதையும், கழிப்பறைகளில் தண்ணீர் வெளியேற சரியான வசதிகள் செய்யப்படாததும், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த விளையாட்டு வீரர்கள், அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது.
கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் “இதைப் போன்ற மட்டமான- சுகாதாரக் குறைவான இடத்தை நாங்கள் பார்த்தது இல்லை” என்று கடுமையாக சாடி உள்ளனர். போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பி விடலாமா என்று கூட ஆலோசிக்கின்றனர்.
இவற்றை எல்லாம் பார்த்து வெட்கத்திலும், வேதனையிலும் உறைந்து போய் இருக்கும் மக்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் காமன்வெல்த் போட்டிகள் அமைப்பு மேயர், “இதெல்லாம் சாதாரண விஷயம்; இதற்கெல்லாம் வெட்கப்பட வேண்டியதில்லை; சுகாதாரக் குறைவு என்பதெல்லாம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும் விஷயம்” என்று மிகவும் அலட்சியமாக செய்தி சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் கூறி உள்ளார். வழக்கம் போல கடைசி நிமிடத்தில் பிரதமர் அலுவலகம் இந்த விஷயத்தில் தலையிட்டு உள்ளதாம்.
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவரும்போது எல்லாம், “இது நாட்டின் கவுரவப் பிரச்சினை; எனவே, பிரச்சினைகளைப் பெரிது படுத்தாமல் போட்டிகள் நல்லவிதமாக நடக்க உதவ வேண்டும்” என்று விளையாட்டு அமைச்சர் எம்.எஸ். கில்லும், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், காமன்வெல்த் போட்டி அமைப்பு தலைவர் சுரேஷ் கல்மாடியும் மீண்டும் மீண்டும் கோரஸாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
எதோ இந்த விளையாட்டு நடத்தவது என்பது இந்த மூன்று பேருடைய தனிப்பட்ட சாதனை என்பது போன்றே இவர்கள் காட்டிக் கொண்டனர். இது இந்திய தேசத்தால் நடத்தப்படும் போட்டி. இதற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. (இந்தப் பணத்தை வைத்து ஒலிம்பிக் போட்டிகளையே வெகு சிறப்பாக நடத்திவிட முடியும்). இந்திய நாடு நடத்தும் போட்டி என்ற வகையில், நியாயமாக பிரதமர்தானே இந்தப் போட்டிகளின் நன்மை மற்றும் தீமைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்?
எதோ ஒரு மூன்றாம் நபர் போலவே பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் நடந்து கொள்கின்றனரே, இவர்கள் சற்றே வரலாற்றை திரும்பிப் பார்ப்பார்களா? 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இதே டெல்லியில் நடத்திய பொது, இரண்டு வருடமே அவகாசம் இருந்த நிலையிலும், அன்றைக்கு இருந்து ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிக் குறைவுகளையும் மீறி, மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார், இந்திரா காந்தி. அவருக்கு உறுதுணையாக இருந்து போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து, உலக அரங்கில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்க வைத்தார், ராஜீவ்காந்தி.
இன்று, ஏழு வருட அவகாசத்துக்குப் பின்னரும், எல்லாவித தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்போதும், பட்ஜெட் என்று ஒன்று இல்லாமல் பணத்தை தண்ணீராக செலவழித்தும், இவ்வளவு கேவலமான நிலைமையில் இந்தியாவின் மானத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்களே, கொஞ்சமாவது தார்மீக பொறுப்பு இருந்திருந்தால் இவர்கள் ராஜினாமா செய்து இருக்க வேண்டாமா?
காமன்வெல்த் போட்டி என்ற பெயரில், கோடி கோடியாக கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இரண்டு மாதங்களுக்கு முன்பே எல்லா ஊடகங்களும் தெள்ளத்தெளிவான ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டினார்களே, அப்போதாவது பிரதமர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? எத்தனையோ திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ள இந்த நாட்டில் கல்மாடியை நீக்கினால் என்ன நடந்து விடும்? பிரதமருக்கு எதற்கு தயக்கம்? அவரை செயல்பட விடாமல் தடுத்தது எந்த சக்தி?
 “இதனை இவனால் முடியும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுரை சொன்னானே தெய்வப் புலவன், அவன் அறிவுரை காதில் விழவில்லை என்றால், இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரதமர் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யர், “காமன்வெல்த் போட்டிகள் என்ற பெயரில் மன்னிக்க முடியாத தவறுகள் நடக்கின்றன; உலக அரங்கில் நமக்கு பெரும் கெட்டப்பெயரை இது வாங்கித் தந்துவிடும். எனவே, போட்டி நடக்கும்போது நாட்டிலேயே நான் இருக்க மாட்டேன்” என்று கொதித்துப் போய் சொன்னாரே, அந்தக் கருத்துக்காவது செவி மடுத்திருக்கலாமே...?
எல்லா விதத்திலும் நம்மோடு போட்டி போடும் சீனா, எவ்வளவு அருமையாக- உலகமே வியந்து பாராட்டும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திக் காட்டினார்களே, அவர்கள் இப்போது நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிக்க மாட்டார்களா?
அரசியல் அசுத்தம் எதுவும் கலக்காத நேர்மையான மனிதர் என்று மக்களால் நம்பப்பட்ட மன்மோகன்சிங், எப்படியாவது பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்கும் வழக்கமான அரசியல்வாதியாக மாறிவிட்டதைப் பார்க்கும்போது, மிகவும் வருத்தமாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன்வெல்த் ஊழலும்- கையாலாகாத்தனமும் அவரை ஏழேழு ஜென்மத்துக்கும் துரத்துமே...! அதைப்பற்றியாவது அவர் கவலைப்படுவாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. நமக்கு அந்தக் கவலை நிச்சயம் இருக்கிறது.
“இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க ஏன் மறுக்கிறீர்கள்” என்று அப்போதைய இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலிடம் கேட்டபோது, அவர் என்ன பதில் கூறினாராம் தெரியுமா? “அந்த முட்டாள்களுக்கு ஆட்சி நடத்தவெல்லாம் தெரியாது; அவர்களிடம் எப்படி இவ்வளவு அருமையான நாட்டை ஒப்படைப்பது?” என்று கேட்டாராம்...
இங்கிலாந்து பிரதமருக்கு அன்றே தெரிந்த உண்மை இந்திய ஏமாளிகளுக்குத் தெரிந்திருந்தால், மன்மோகன்களும், கல்மாடிகளும், எம்.எஸ்.கில்களும் அட்டை போல பதவிகளில் ஒட்டிக்கொண்டு இருக்க முடியுமா? “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்...”

2 comments:

  1. மனமோகன் சிங் முட்டாளாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன, இப்போ அவர் சோனியாவின் கைப்பாவை.

    ReplyDelete