Sunday, September 19, 2010

கொலையில் எங்கிருந்து வந்தது “கவுரவம்”...?


சமீப காலமாக வட இந்திய பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சி செய்திகளில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது “கவுரவக் கொலைகள்” குறித்த செய்திகள். தங்களது குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற மனைவியையோ மகளையோ கொல்வதுதான் ஒரே வழி என்ற ரீதியில் செய்யப்படும் கொலைகள்தான் இந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றன.
கொலை என்பதே படுபாதகமான செயல்; இதில் கவுரவம் எங்கிருந்து வந்து ஒட்டிக்கொண்டது? என்னும் நியாயமான கேள்வி நம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த ரீதியிலான கொலைகள் பற்றிய செய்திகள் சில நாட்களாக தமிழகத்திலும் தென்படுவது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
“மதுரையில் சொந்த மகளையே விஷ ஊசி போட்டுக் கொன்ற தந்தை... சிவகங்கையில் காதல் கடிதம் எழுதிய மகளை விஷம் கொடுத்த தந்தை...” என இந்தப் பட்டியல் நீளுகிறது.
மனிதகுலம் தோன்றிய காலத்தில் இருந்தே ஆதாம்- ஏவாள்; அம்பிகாபதி- அமராவதி கதைகளை ஏராளமாக கேட்டு வளர்ந்தவர்கள்தான் நாம்! இரண்டு தூய்மையான உள்ளங்கள் ஒன்று சேருவதை இலக்கியங்களிலும், சினிமாக்களிலும் மெய்மறந்து ரசிக்கும் நமது மக்கள், தங்கள் வீட்டில் அந்த காதல் பூ மணப்பதை மட்டும் விரும்புவதில்லை.
தொலைத்தொடர்பு துறையின் அதீத வளர்ச்சியினாலும், உலகமயமாக்கல் மற்றும் இண்டர்நெட் போன்றவற்றினாலும் உலகமே உள்ளங்கையில் சுருங்கி விட்டது. அதேபோல், உலகமெங்கும் பெண்களின் கல்வியறிவு வெகுவாக முன்னேறி விட்ட காரணத்தினால் நகர்ப்புறங்களில் பழமைவாதம் என்பதும் நன்றாகவே குறைந்து விட்டது. இதனால் ஜாதி- மத ரீதியிலான பிரிவினைகள்- ஏற்றத்தாழ்வுகள் தவறு என்கின்ற விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரிக்கத்தான் செய்கிறது.
அதேபோல, பிற ஆண்களிடம் பேசுவதே தவறு என்று கருதும் போக்கில் இருந்து விடுபட்டு, ஆண்களும் பெண்களும் விகற்பம் இல்லாமல்- நண்பர்களாக பழகுவதை வெகு இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்று பெரும்பாலான பெற்றோர்களிடம் காணப்படுவதை நாம் குறிப்பிட்டுத்தான் தீரவேண்டும்.
இப்படி எல்லாவிதத்திலும் ஆண்- பெண் பேதம் என்பது குறைந்து, ஒத்த கருத்து உள்ள இருபாலர் பழகுவதை குதர்க்கம் இல்லாமல் பார்க்கும் மன நிலைக்கு சமூகம் முன்னேறி விட்டது- குறிப்பாக தமிழகம் அந்த நிலையை எட்டிவிட்டது என்று இறுமாந்து இருந்த நிலையில், சமீபத்திய செய்திகள் அந்த எண்ணத்தை சம்மட்டியால் அடித்து தகர்த்து விட்டது.
மனிதர்கள் எடுக்கும் முடிவுகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று அறிவு சொல்வதைக் கேட்டு எடுக்கப்படுவது; மற்றொன்று இதயம் சொல்படி நடப்பது...! இதயம் எப்போதுமே உணர்ச்சிகளின் கொந்தளிப்புகளுக்கு உட்பட்டது. அறிவோ, அனைத்துவித நல்லது கெட்டதையும் ஆராய்ந்து முடிவு எடுக்கும் தன்மை வாய்ந்தது.
கொலை செய்த தந்தைகள் நிச்சயமாக உணர்ச்சிவசப்பட்டு தான் இந்த பாதக செயலை செய்திருக்கின்றனர். தனது மகள் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி மொபைல் போனில் பேசுவதும், அவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவதும் தங்களது குடும்ப கவுரவத்துக்கு இழுக்கு என்பதாலேயே இந்த விபரீத முடிவை எடுத்து விட்டதாக சொல்லி இருக்கின்றனர். தங்களது மகள்களின் தவறான நடத்தையே தங்களை இந்த பாதக செயலில் தள்ளிவிட்டு விட்டதாக விசாரணையின்போது கூறி உள்ளனர். ஆனால், கொலை என்பது எதையும் நியாயப்படுத்திவிட முடியாது.
மும்பையில் கொலைத் தாண்டவம் ஆடிய கஸாப்புக்கு மரணதண்டனை விதிப்பதில் கூட எவ்வளவோ விதிமுறைகளையும், மரபுகளையும் நாம் பின்பற்றும் அதே வேளையில், இதுபோன்ற எவ்வளவோ கொலைகள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. போலீஸ் தரப்பில் கூறும்போது, “இது போன்ற எண்ணற்ற கொலைகள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. போலீஸ் கவனத்துக்கு வரும் குற்றங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்கின்றனர்.
தங்களது தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் உள்ள பழக்கவழக்க வித்தியாசங்களை புரிந்து கொள்ள இயலாமல்- புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யாமல் தங்களுடைய விருப்பப்படி மட்டுமே தங்களது குழந்தைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறான அணுகுமுறை என்பதையும், அதன் விளைவுகள் மிகவும் விபரீதமாக அமைந்துவிடக் கூடும் என்பதையும் பெற்றோர்களுக்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல, பெற்றோர்களுக்கு மனம் என்று ஒன்றே கிடையாது; தங்களுடைய சந்தோசம் ஒன்றே பிரதானம்; மொபைல் போன் கண்டுபிடித்ததே நண்பர்களுடன் அர்த்தம் இல்லாத பேச்சுக்களை பேசுவதற்காகத்தான் என்று குறிக்கோளே இல்லாமல் திரியும் பிள்ளைகளும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது நலம்!
தமிழர்கள் என்றாலே நாகரீகம் மிக்கவர்கள்; கருணையும் அன்பும் நிறைந்த அறிவாளிகள் என்ற நம்பிக்கையைத் தகர்த்திட வேண்டாம்!

1 comment:

  1. thideerni enga irunthu intha kolaigal molaikuthu....yaar ithukaana thairiyathaiyum...thappikkum manapaanmaiyaiyum oruvaakukirargal endrum theriyavillai

    ReplyDelete