Tuesday, October 5, 2010

விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் எதற்கு?

ஷங்கரின் கனவு படைப்பு- ரஜினியின் அசத்தல் நடிப்பு- ஐஸ்வர்யா என்ற அழகுக் குவியலின் தோற்றம்- சந்தானத்தின் நகைச்சுவை கலாட்டா- சன் பிக்சர்ஸின் பிரமாண்டத் தயாரிப்பு- இந்தியாவிலேயே இது போன்ற தயாரிப்பு வந்ததில்லை என ஏக தடபுடலுடன், பத்திரிக்கைகளின் ஒட்டுமொத்த ஜால்ரா ஓசையுடன் வெளியான எந்திரன் படத்தின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
“நீலச்சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும்” என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு எல்லா தியேட்டர்களிலும் அனைத்து காட்சிகளின் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன என்று ஜால்ரா பத்திரிகைகளின் ஆதரவுடன் அடித்த தம்பட்டத்தின் ஓசை அடங்கும் முன், அதாவது நேற்றே பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட்டுகள் தாராளமாகக் கிடைத்தன.
முதல் நாள் எப்படியாவது ஒட்டுமொத்த கூட்டத்தையும் தியேட்டருக்கு வரவழைத்து, 50 ரூபாய் டிக்கெட்டுக்கு 300 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்ற என்ற நோக்கத்தில் பட அதிபர்கள் செய்த தகிடுதத்தம் வேணுமானால் பலித்து இருக்கலாம். ஆனால், “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு” என்ற பழமொழிக்கேற்ப, எட்டு நாள் அல்ல, மூன்றாம் நாளே புளுகு மூட்டை அவிழ்ந்து விட்டதை, முதல் நாள் 300 ரூபாய் கொடுத்து பார்த்தவர்கள் எல்லாம் மனப்புழுக்கத்தொடு எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆட்சி மற்றும் அதிகாரம் கையில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, தர்ம நியாயங்களை மட்டும் அல்ல, சட்டத்தையும் இந்தப் படத்திற்காக இஷ்டம் போல வளைத்து, எப்படி எல்லாம் ஒரே நாளில் பணத்தை சுருட்ட முடியுமோ, அப்படி எல்லாம் சுருட்டி உள்ளனர்.
நூறு கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு, “எந்திரன்” என்ற தமிழ் பெயர் (....?) வைத்து விட்டதால் முழு வரிவிலக்கு; தியேட்டரில் இஷ்டம் போல டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யக்கூடாது என்ற விதியை மீறி, எக்கச்சக்கமாக கட்டண உயர்வு... அல்ல, அல்ல.... கட்டணக் கொள்ளை நடைபெற்றதை சட்டத்தைக் கையில் வைத்து இருப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை; (சங்கம் போன்ற ஒரு சில நியாயமான தியேட்டர்கள், வழக்கமான விலையிலேயே டிக்கெட் விற்றனர்).
தியேட்டர்களில் வழக்கமாக நான்கு காட்சிகள் திரையிட மட்டுமே அனுமதி உண்டு. பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி கொடுப்பதும் உண்டு. ஆனால், இந்தப் படத்தை எட்டு காட்சிகள் திரையிட்டனர். முதல் நாள் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை (வெறியை) காசாக்கி விடவேண்டும் என்ற களவாணித்தனத்திற்கு அரசு எந்திரங்களும் துணை போயின.
தனது “ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு” கொடுத்ததாக பாடி ஆடிய ரஜினிக்கு அதுவும் போதவில்லை போலிருக்கு. “ஒரு துளி வியர்வைக்கு ஒரு வைரக்கல்” வேண்டும் போல... தனது ரசிகர்களிடம் கொள்ளை அடிக்க ரஜினியும் துணை போயிருக்கிறார் என்பதுதான் உண்மை.
சரி, இவ்வளவு கொள்ளைதான் அடிக்கப் போகிறோமே, நல்ல படத்தையாவது கொடுப்போம் என்று நினைத்தார்களா...? அட... குறைந்தபட்சம், ரஜினி ரசிகர்களைத் திருப்திபடுத்தும் வகையில் ரஜினி ஸ்டைல், மேனரிஸம் போன்றவற்றையாவது திகட்டத் திகட்ட கொடுத்திருக்கலாம். அதுவும் கிடைக்காமல், ரஜினி ரசிகர்கள் ஷங்கரை கேட்ட வார்த்தையால் திட்டுவதை தியேட்டரில் காண முடிகிறது.
ஒருசிலர், சிறுவர்கள் பார்த்து ரசிக்கலாம் என்று படத்தைப் பற்றி ஒரு கருத்து சொல்கின்றனர். சிறுவர்கள் பார்த்து ரசிக்கத்தான் எண்ணற்ற தரமான ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் உள்ளனவே.... இதுபோன்ற அரைவேக்காட்டுப் படங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இன்றைய சிறுவர்கள் இல்லை என்பதே யதார்த்தம்.
ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் சமுதாய அவலங்களை அற்புதமாக சாடி இருப்பதுடன், அழகான காதலையும் சொல்லி இருப்பார். ஆனால், இந்தப் படத்தில் ஷங்கரின் கற்பனை முற்றிலும் வறண்டு விட்டது என்பதற்கு, காதல் காட்சிகளைக் கூட ரசிக்கும்படியாக அவரால் எடுக்க முடியாமல் திணறியதில் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது.
சினிமா என்பது லாஜிக்குக்கு எல்லாம் அப்பாற்பட்டதுதான்... ஆனால், அது முட்டாள்தனமானதாக இருக்கக் கூடாது. இதற்கு ஏகப்பட்ட காட்சிகளை உதாரணமாக சொல்லலாம். சார்ஜ் முழுவதுமாக போன ரோபோ, ஐஸ்வர்யாவின் குரலைக் கேட்டதும் தனக்குத் தானே சார்ஜ் பண்ணிக்கொண்டு, ரயில்வே ட்ராக்கில் ஸ்கேட்டிங் செய்தபடி வருவதும் (ஏன் பறந்து வரவில்லை என்பது ஷங்கருக்கு மட்டுமே தெரியும்), துண்டு துண்டாக வெட்டப்பட்டு குப்பைமேட்டில் வீசப்பட்ட பின்னர் தானாகவே ஒட்டிக்கொண்டு காரில் ஏறி படுத்துக் கொள்வதும், காமடி என்ற பெயரில் கொசுக்களுடன் பேசுவதும்... இது ரோபோவா இல்லை, விட்டலாச்சார்யா படத்தில் வரும் மாயாஜால குட்டிச்சாத்தானா?
தமிழில் டப்பிங் செய்யப்பட்ட அவதார் போன்ற ஹாலிவுட் படங்களை கண்டுகளித்து விட்ட பிறகு, கிராபிக்ஸ் என்ற பெயரில் குழந்தைத்தனமான காட்சிகளுக்காக பணத்தை இறைத்து இருப்பது, ஷங்கரின் தன்னம்பிக்கை குறைவையே காட்டுகிறது. நல்ல படைப்பாளி என்பவன், தனது கிரியேட்டிவிட்டி மேல் அபார நம்பிக்கை கொண்டிருப்பான். அது ஷங்கரிடம் சுத்தமாகக் காணப்படவில்லை.
ரஜினி நிலைமையோ இன்னும் மோசம்... தன்னுடைய வழக்கமான பாணியை வெளிப்படுத்த முடியாமல், நல்ல கதாபாத்திரமும் கிடைக்காமல், “எதைத் தின்றால் பித்தம் தெளியும்?” என்று அல்லாடுபவராகத்தான் தெரிகிறார். விஞ்ஞானி ரஜினியின் வயதான தோற்றமும், கலாபவன்மணியிடம் பயந்து ஓடும் காட்சியும் அவரது ரசிகர்களை தர்மசங்கடத்தில் நெளியச் செய்வது என்னவோ உண்மைதான்!
கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்... “விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் எதற்கு?” என்று... எந்திரனுக்கு இது முற்றும் பொருந்தும். தனது ரசிகர்களுக்கு இனியாவது துரோகம் செய்வதை ரஜினி நிறுத்திக் கொள்ள வேண்டும்...!

No comments:

Post a Comment