Saturday, December 4, 2010

ஜாதி இரண்டொழிய வேறில்லை... நேர்மை ஜாதி; ஊழல் ஜாதி...!

“ஜாதி” என்பது இந்தியாவின் மிக மோசமான அடையாளம் மட்டுமல்ல, அபாயகரமான ஆயுதமும் கூட...! அதிலும் தமிழக முதல்வர் கருணாநிதி அதை கையாளும் விதமே அலாதியானது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எழும் போதெல்லாம் “உயர்ஜாதி”யினரின் சதி என்று கூப்பாடு போடுவதும், தனது குடும்பம் சம்பந்தம் வைக்க வேண்டும் என்றால் மட்டும் உயர்குடியை தேடி அலைவதும் அவருக்கு கைவந்த கலை!
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுமார் ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டு, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் முகத்தில் உமிழாத குறையாக, கிட்டத்தட்ட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக அமைச்சரவையில் இருந்து ராஜா வெளியே அனுப்பப்பட்டதற்கு, கருணாநிதி கூறும் காரணம்,ராஜா ஒரு தலித் என்பதால் அவர் பழிவாங்கப்படுகிறாராம்... வழக்கம் போல இதற்கு பக்க வாத்தியம் வாசிக்கும் வேலை வீரமணிக்கு...
ராஜாவோடு இந்தப் பிரச்சினையில் அவர் ஒப்பிடுவது பொருளாதார மேதை பெரியவர் டி.டி.கே.வோடு! இந்தியாவின் முதல் நிதி மந்திரியாக அவர் பதவி வகித்தபோது, முந்த்ரா என்ற நஷ்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கம்பெனி பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கிய விவகாரத்தில், தனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாதபோதும் கூட, தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்த அந்தப் பெரியவரை, அவர் உயர் ஜாதியை சேர்ந்தவர் என்பதால் விட்டு விட்டார்களாம்.
ஒப்பிடுவதற்கும் ஒரு தகுதி வேண்டாமா? தனது பதவி காலத்தில் டி.டி.கே. அவர்கள் செய்த சாதனைகள் ஒன்றா இரண்டா? இன்றும் மிகச்சிறப்பாக திகழும் யூனிட் டிரஸ்ட், தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், தண்டகாரண்யத் திட்டம், நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு பென்ஷன் கிடைக்க வழிவகை செய்த மாபெரும் திட்டம்... இன்னும் எண்ணற்ற சாதனைகளை செய்த அவர் எங்கே? பிரதமரின் எச்சரிக்கையையும் அலட்சியப்படுத்தி விட்டு நாட்டின் வளத்தை ஒரு குடும்பத்தின் லாபத்திற்கு திருப்பி விட்ட கேவலத்தை மட்டுமே செய்த ராஜா எங்கே? ஜாதியை மட்டுமே சொல்லி தப்பிக்கும் நிலையை எல்லாம் ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் தாண்டி விட்டது என்பது கருணாநிதியின் மனதுக்கே தெரிந்திருந்தாலும், வெட்டி கூச்சலிட்டு எதாவது செய்ய முடியுமா என்று தவிக்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பதவி இழந்த அசோக் சவான் தலித்தா? இல்லை, சுரேஷ் கல்மாடி தான் தலித்தா? அன்றைக்கு ஒரு தமிழன் என்று கூட பார்க்காமல் ஓ.வி. அழகேசன் அவர்களை, அரியலூர் ரெயில் விபத்திற்காக தார்மீக பொறுப்பேற்று பதவி விலகியேத் தீரவேண்டும் என்று கோஷமிட்டார் கருணாநிதி, அது ஜாதி அடிப்படையிலா?
பச்சைத் தமிழர் என்று பெரியாரே வாய் நிறைய பாராட்டிய காமராஜ் ஆட்சியை கவிழ்க்க ராஜாஜி உதவியைக் கேட்கும்போது மட்டும் அவர் மூதறிஞராக காட்சி அளித்தது எப்படி? அதற்கு முன்பு அதே ராஜாஜி பிடிக்காதவராக இருந்தபோது மட்டும் அவர் ஜாதி கண்ணில் பட்டது; அவரை கோணல் புத்திக்காரர், குல்லுகப் பட்டர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி ஏசியவரும் இதே கருணாநிதிதான்!
தன்னுடைய பேரன்- பேத்திகள் இன்று மணம் முடிப்பதெல்லாம் பார்ப்பன குடும்பங்களில் என்பது கருணாநிதி குடும்பத்தை அருகில் இருந்து கவனிப்பவர்களுக்கு நன்றாகவேத் தெரியும். அங்கெல்லாம் மட்டும் இவருக்கு பார்ப்பனீயம் இனிப்பதின் மர்மம் என்னவோ?
சமீபத்தில் திடீரென நேரு குடும்பத்துக்கும் எனக்கும் நெடிய உறவு என்று சொந்தம் கொண்டாடினாரே, அந்த நேருவும் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்... ஆம்! காஷ்மீர் பண்டிட் தான்!
எனவே, தனக்கு தேவைப்படும்போது மட்டும் கையில் எடுத்துக் கொள்ளும் அந்த உளுத்துப்போன ஜாதீய வாதத்தை உடப்பில் போட்டு விட்டு, யதார்த்தத்துக்கு வருவது அவருக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் மிக மிக நல்லது! ஆம்... ஜாதி இரண்டொழிய வேறில்லை... அது ஊழல் ஜாதி மற்றும் நேர்மை ஜாதி. இதில் கருணாநிதி எந்த ஜாதி என்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே நன்கு தெரியும்!

2 comments:

  1. //தனக்கு தேவைப்படும்போது மட்டும் கையில் எடுத்துக் கொள்ளும் அந்த உளுத்துப்போன ஜாதீய வாதத்தை உடப்பில் போட்டு விட்டு, யதார்த்தத்துக்கு வருவது அவருக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் மிக மிக நல்லது! ஆம்... ஜாதி இரண்டொழிய வேறில்லை... அது ஊழல் ஜாதி மற்றும் நேர்மை ஜாதி. இதில் கருணாநிதி எந்த ஜாதி என்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே நன்கு தெரியும்!
    //

    சாபாஷ் ... நல்ல சவுக்கு உங்கள் பதிவு, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஜாதி இரண்டொழிய வேறில்லை... அது ஊழல் ஜாதி மற்றும் நேர்மை ஜாதி. இதில் கருணாநிதி எந்த ஜாதி என்பது நாட்டு மக்கள் அனைவருக்குமே நன்கு தெரியும்!

    ReplyDelete